×

கொண்டாட்டத்தில் வார்டன், தாசில்தார்கள்: ஆதிதிராவிடர்நல அரசு விடுதியில் விரயமாகுது மக்கள் பணம்

சிறப்பு செய்தி
தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ்செயல்படும் மாணவ, மாணவிகள் விடுதியில் போலி பில் போட்டு பல லட்சம் சுருட்டும் வார்டன், தாசில்தார்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் அரசுப்பணம் விரயமாகி வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை. இத்துறை மூலம் நிதி ஒதுக்கி மாணவர்களின் அடிப்படை தேவைகள், கல்வி உரிமைகள் நிறைவேற்றுவது அரசின் கடமை. ஆனால், ஆதிதிராவிடநலத்துறையின் கீழ்செயல்படும் விடுதிகள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1,143 பள்ளி விடுதிகள், 143 கல்லூரி விடுதிகள், 17 ஐடிஐ விடுதிகள், 5 பாலிடெக்னிக் விடுதிகள், 15 முதுகலை பட்டதாரி கல்லூரி விடுதிகள், ஒரு சட்ட கல்லூரி விடுதி என மொத்தம், 1,324 விடுதிகள் உள்ளன. இவற்றில், 98 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளை சேர்க்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தொகுதி எம்.எல்.ஏ, ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த இருவர், துணை கலெக்டர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர். இக்குழு பரிந்துரை செய்யும் நபர்களை தான், விடுதியில் சேர்க்க வேண்டும். ஆனால், பெரும்பாலான விடுதிகளில், மாணவர்கள் சேர்க்கப்படாமலே, அவர்கள் சேர்ந்ததாகவும், சில விடுதிகளில் சேர்ந்த மாணவர்கள், விடுதிக்கு வராத நிலையில், அவர்கள் வருவதாக கணக்கு காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விடுதியில் தங்கிபடிக்கும் ஒருவருக்கு மாதத்துக்கு ரூ.900 உணவுக்காக செலவிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு முடிவெட்ட ரூ.50, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 75 கட்டணமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மாணவிகளுக்கு நாப்கின், சூடான உணவு தயாரிக்க கிங்பாயிலர், வாஷிங்மெஷின், பாய், பெட்ஷிட், கட்டில் போன்ற பல்வேறு வசதிகளையும் செய்துகொடுக்கிறது. குறைந்தபட்சம் ஒரு விடுதியில் 60 மாணவர்கள் இருப்பதாகவும் அதற்கு மாதத்துக்கு ரூ.58 ஆயிரம்வரை செலவு செய்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விடுதிக்கு 10 மாணவர்கள் இருப்பதே அதிசயம்தான். 60 மாணவர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு அதற்கான செலவுத்தொகையை வார்டன்கள், ஆதிதிராவிடர்நலத்துறை தனி தாசில்தார் கூட்டுசேர்ந்து பலமாவட்டங்களில் அரசு பணத்தை விரயமாக்கி வருகின்றனர்.

குறிப்பாக காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ஆதிதிராவிடர்நலத்துறை கண்டுகொள்ளாமல் உறக்கத்திலேயே இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பனையபுரம், விக்கிரவாண்டி, மிட்டாமண்டகப்பட்டு, வழுதாவூர், சிங்கனூர், திண்டிவனம் போன்ற பகுதியிலுள்ள மாணவ, மாணவிகள் விடுதிகளில் 10க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். ஆனால் 60 பேர் இருப்பதாக கையெழுத்து பெறப்பட்டு அவர்களுக்கான செலவுத் தொகையை பெற்று கொண்டாட்டத்தில் இருக்கிறார்களாம் வார்டன்களும், தனிதாசில்தார்களும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே வார்டன்களாக பணியாற்றவேண்டும். பின்னர் கலந்தாய்வு மூலம் ஆதிதிராவிடநலப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக செல்லவேண்டும். ஆனால், 8 ஆண்டுகளாக வார்டன்கள் கலந்தாய்வு நடத்தாமல், உயர் அதிகாரிகளை சரிகட்டி வைத்திருக்கிறார்கள். அரசு பணம் விரயமாவதை தடுக்கவும், ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதியை முறையாக செலவிடவும் தமிழக கவர்னர் இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

ஆந்திராவுக்கு அரிசி கடத்தும் வார்டன்கள்

ஒரு விடுதிக்கு 60 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் இருப்பவர்களோ 10க்கும் குறைவானர்கள் என்பதால் விடுதிகளுக்கு வரும் அரிசி மூட்டைகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் பணியில் வார்டன்கள் தீவிரம் காட்டி வருகின்றார்களாம். திருவள்ளூர் மாவட்டத்தில் தான் அதிகளவு நடக்கிறதாம். ஆந்திராவுக்கு அரிசியை விற்பனை செய்த 5 வார்டன்களை காவல்துறையும் கைது செய்து விசாரணை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. இங்குமட்டுமல்ல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இதேநிலைதான்.

விலைக்கு வாங்கப்படும் விசாரணை அதிகாரிகள்

விடுதிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ஆட்சியர், துணை ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு புகார் அளித்தாலும், ஆய்வு செய்து தவறு கண்டுபிடிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீதான நடவடிக்கை சில நாட்களில் நீர்த்துபோகிறது. தவறுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்படும் அதிகாரியை விலை கொடுத்து வாங்கி அவர் மீது தவறு கிடையாது என்று தெரிவித்து ஆட்சியர் உத்தரவையே நீர்த்து போக செய்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் இது போன்று ஆட்சியர் ஆய்வில் சிக்கியவர் விசாரணை அதிகாரியை விலைக்கு வாங்கி தன்மீது எந்த தவறும் இல்லையென நிரூபித்த சம்பவமும் நடந்துள்ளது.

Tags : Warden ,Tasildars ,government hospital ,Adivasi , People money
× RELATED முற்றுகை போராட்டம்