×

கோவையில் இளம்பெண் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய சம்பவத்துக்கு அதிமுக கொடிக்கம்பம் காரணம் அல்ல: உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வக்கீல் தகவல்

சென்னை: கோவையில் இளம்பெண் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய சம்பவத்துக்கு அதிமுக கொடிக்கம்பம் காரணம் அல்ல என்று அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். பள்ளிக்கரணை பகுதியில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண விழாவுக்காக நடுரோட்டில் வைத்திருந்த பேனர் சரிந்து, பெண் பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து சுபயின் தந்தை ஆர்.ரவி, மகள் இழப்புக்கு ரூ. 1 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் அச்சக உரிமையாளர்கள், மூலப்பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என். சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. சுபயின் தந்தை ரவி சார்பில் வழக்கறிஞர் கே.வி.முத்துவிசாகன், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் தலைமை வழக்கறிஞர் எமிலியாஸ், அரசு ப்ளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், எஸ்.பிரபாகரன், பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர். சுபஸ்ரீ இறப்பு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், விபத்து நடந்த இடம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி என்றும், காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள் வரவில்லை என்றும், இருந்தபோதும் சுபஸ்ரீயின் இறப்புக்கு பொறுப்பேற்று இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல கோவையில் இளம்பெண் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய சம்பவத்துக்கு கொடிக்கம்பம் காரணம் இல்லை எனவும், இதுதொடர்பாக விரிவாக வாதிடவுள்ளேன் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘அரசியல் கட்சியினர் வைத்த சட்டவிரோத பேனரால் உயிரிழப்புகள் ஏற்படும்போது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு தனது பொதுநிதியில் இருந்து ஏன் வழங்குகிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை யார் விதிகளை மீறினார்களோ அந்த சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரிடமிருந்து வசூலிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும் ஒவ்வொரு சம்பவத்தின்போதும் இழப்பீட்டுத் தொகை வேறுபடுவதால் இதுதொடர்பாக ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன.6ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Tags : Rajeshwari ,AIADMK ,incident ,accident ,Coimbatore ,Rajeswari , Coimbatore, Rajeswari
× RELATED திருவாரூரில் மின்சாரம் தாக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு..!!