×

அரியலூர் அருகே சோகம்; தொழிலதிபர் சொகுசு கார் மோதி; 2 பேர் பலி, 29 ஆடுகளும் செத்தன

அரியலூர்: அரியலூர் அருகே தாறுமாறாக வந்த சொகுசு கார் மோதி 2 பேர் இறந்தனர். 29 ஆடுகளும் செத்தன. காரை ஓட்டி வந்தவரை கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் 2 மணி நேரம் சாலை மறியல் செய்தனர். அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர்கள் முருகேசன் (41), பழனிச்சாமி மனைவி லதா (35). இவர்கள் நேற்று தங்களது ஆடுகளை அரியலூர் சாலையோரத்தில் உள்ள தரிசு நிலங்களில் மேய்த்து விட்டு, மாலை வீட்டுக்கு ஓட்டி வந்தனர். அப்போது, அரியலூரிலிருந்து தஞ்சை நோக்கி அசுர வேகத்தில் வந்த வெளிநாட்டு கொசுகு கார் சாத்தமங்கலம் அருகே சென்றுகொண்டிருந்த ஆட்டு மந்தைக்குள் புகுந்தது.

இதில் ஆடுகளை ஓட்டி வந்த முருகேசன், லதா இருவரும் காரில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும், 29 ஆடுகள் உடல் சிதறி சென்தன. விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழப்பழூவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே காரை ஓட்டி வந்தவரை கைது செய்ய வேண்டும், இறந்தவர்களுக்கு ₹25 லட்சம் நிவாரணம் தர வேண்டும், சாலையை அகலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரியலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி- அரியலூர் மார்க்கத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் எஸ்.பி. ஸ்ரீனிவாசன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காரை ஓட்டி வந்தவர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவரை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் ஓட்டி வந்தவர் கோவையை சேர்ந்த தொழிலதிபர் என கூறப்படுகிறது.

Tags : Ariyalur ,Businessman , Ariyalur, luxury car, goats, villagers struggle
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...