×

மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.2,000 வரை உயர்வு

*விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு : மரவள்ளி கிழங்கு கடந்த 25 நாட்களில் ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, பெருந்துறை, மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் மரவள்ளி கிழங்கு சேலம் ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.ஜவ்வரிசி விலை கடந்த ஒரு மாதமாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் ஜவ்வரிசி மூட்டை (90 கிலோ) ரூ.5,350க்கு விற்ற நிலையில் 15 நாட்களில் திடீரென்று விலை சரிந்து கடந்த 14ம் தேதி ரூ.4,725 விற்றது. பின்னர், படிப்படியாக உயர்ந்த ஜவ்வரிசி விலை, தற்போது ரூ.5100க்கு விற்பனையாகிறது.

அதேவேளையில் மரவள்ளிக்கிழங்கு விலை, ஒரே சீராக உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு 25 நாட்களில் மட்டும் மரவள்ளிக்கிழங்கு விலை டன்னுக்கு, ரூ.2,000 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அக்டோபர் இறுதியில் மரவள்ளி கிழங்கு டன் ரூ.6,000 வரை விற்பனையான நிலையில் தற்போது ரூ.6,800 முதல் 8,000 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு மரவள்ளிகிழங்கு விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஆனால், மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நிலத்தில் ஈரப்பதம் இருப்பதாலும், அழுகல் போன்ற காரணங்களாலும் விளைச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

புரோக்கர்கள் ஆதிக்கம்

மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளை அணுகும் புரோக்கர்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு தற்போதைய சந்தை நிலவரத்தில் இருந்து விலை குறைத்து வாங்குவதால் விவசாயிகளுக்கு உண்மையான லாபம் கிடைப்பதில்லை. குறிப்பாக, மலைக்கிராமங்களில் மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி புரோக்கர்கள் கொள்ளை லாபம் அடைந்து வருகின்றனர். இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Farmers happy,Tapioca tuber,erode,ton
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...