×

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விவகாரத்தில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பொன்.மாணிக்கவேல் வழக்கு


தமிழகத்தில் இருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகளை மீட்கவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற போலீஸ் ஐஜி பொன்.மாணிக்கவேலை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு நியமித்தது. அவருக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தாததால் தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு கடந்த 20ம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்.மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் குறித்து தமிழக அரசும், இதுவரை விசாரித்த வழக்கு விபரங்கள் குறித்து பொன்.மாணிக்கவேல் தரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழக அரசு வழக்கு

இதற்கிடையில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது வரும் டிசம்பர் 2ம் தேதியன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்த நிலையில், இவ்வழக்கை வரும் திங்கட்கிழமையே விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருக்கும்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் எப்படி இந்த வழக்கை விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். எனவே, பொன்.மாணிக்கவேலின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி அருண் மிஷ்ரா, வரும் 25ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்தினால் உடனே உச்சநீதிமன்றத்தை அணுகுங்கள் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், டிசம்பர் 2ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25ம் தேதியோ அல்லது 26ம் தேதியே இந்த வழக்கை விசாரிப்பதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.



Tags : Ponni Manickavel ,Chennai High Court ,Ponni Manikkavel ,Supreme Court ,government ,Tamil Nadu , Madras High Court, Pon.Manikkavel, Court Insult Case, Tamil Nadu Government, Supreme Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...