×

வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நிறைவு!: ஏப்ரல் 6ம் தேதி இந்த வாக்குச்சாவடியில் 220 வாக்குகள் பதிவான நிலையில், இன்று 186 வாக்குகள் மட்டுமே பதிவு..!

சென்னை: சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பதிவு செய்தனர். இந்நிலையில் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் இருந்து தேர்தல் விதிமுறைகளை மீறி வேளச்சேரி தரமணி 100 அடி சாலை டான்சி நகர் தனியார் மருத்துவமனை அருகே இரவு 7 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டுபேர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றனர். அவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட உதவி பொறியாளர் செந்தில்குமார், தூய்மைப் பணி மேஸ்திரி வேளாங்கண்ணி, தூய்மை பணியாளர் சரவணன் ஆகியோரை சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து வேளச்சேரி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையம் 92ல் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இன்று வேளச்சேரி சீதாராம் நகர் 1வது தெருவில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளி வளாகத்தில் மறுவாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. தேர்தல் நடக்கும் பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், காலையில் இருந்தே வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவு மையங்களில் தவறுகள் நடைபெறாமல் இருக்க 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதிகாரிகள் நேரலையில் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மாலை 7 மணியுடன் மறுவாக்குப்பதிவு நிறைவு பெற்றது. ஏப்ரல் 6ம் தேதி இந்த வாக்குச்சாவடியில் 220 வாக்குகள் பதிவான நிலையில், இன்று 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மறுவாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா பல்கலைகழகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. …

The post வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நிறைவு!: ஏப்ரல் 6ம் தேதி இந்த வாக்குச்சாவடியில் 220 வாக்குகள் பதிவான நிலையில், இன்று 186 வாக்குகள் மட்டுமே பதிவு..! appeared first on Dinakaran.

Tags : Velachery Constituency ,CHENNAI ,Velachery constituency, Chennai ,Tamil ,Nadu ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...