திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் சுல்தான் பேட்டை அடுத்த மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி உமாதேவி. இந்த தம்பதிக்கு நிவேதன் என்ற மகன் உள்ளார். கணவன்- மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, விபத்தில் சிக்கியதாக வெங்கடேசனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் உமாதேவி சேர்த்துள்ளார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார்.வெங்கடேசன் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடல் எரியூட்டப்பட்டது. வெங்கடேசன் மரணத்தை விபத்து வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவுகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதில் வெங்கடேசன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிய வந்தது. கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கான அறிகுறி இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதையடுத்து சந்தேகமடைந்த மங்கலம் போலீசார் உமாதேவியிடம் விசாரித்தனர். விசாரணையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து வெங்கடேசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர் வேலைக்கு போகாமல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். மேலும் குடி பழக்கத்திற்கும் அடிமை ஆகியுள்ளார். குடிக்க பணம் இல்லாத நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக விற்று மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி வெங்கடேசன் வீட்டிலிருந்த மிக்ஸியை எடுத்து விற்று அந்த பணத்தில் மது அருந்தியுள்ளார்.
இதுகுறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உமாதேவி அருகில் இருந்த கட்டையால் தாக்கியதில் வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.குடிபோதையில் மயங்கி விழுந்ததாக நினைத்த உமாதேவி அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது, தலையில் ரத்த காயத்துடன் வெங்கடேஷ் கிடந்ததை கண்டு உமாதேவி அதிர்ச்சி அடைந்தார்.
உண்மையை சொன்னால் தான் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் உறவினர்களிடமும் காவல்துறையிடம் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி கணவர் காயமடைந்துவிட்டதாக தெரிவித்ததாக உமாதேவி கூறியுள்ளார்.இதனையடுத்து விபத்து வழக்கினை கொலை வழக்காக மாற்றிய மங்கலம் போலீசார், உமாதேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.