×

எப்படி நடந்தாலும் மக்களே ஓட்டு போடுகிறார்கள்: உள்ளாட்சி தேர்தலை சட்டரீதியாக தடுத்து நிறுத்த முடியாது: முதல்வர் எடப்பாடி உறுதி

தூத்துக்குடி: உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான உறுதியை மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளது.எனவே உள்ளாட்சித் தேர்தலை சட்டரீதியாக தடுத்து நிறுத்த முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தென்காசி புதிய மாவட்டம் துவக்க விழா இன்று (22ம் தேதி) தென்காசியில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் அளித்த பேட்டி: 2021லும் அதிமுக ஆட்சிதான் மலரும் என்பதை தான் அதிசயம் என்று ரஜினி கூறியிருப்பார் என நினைக்கிறேன். கமலும், ரஜினியும் இணைந்து தேர்தல் பணியாற்ற போவதாக கூறியிருப்பதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. கட்சியை ஆரம்பிக்கட்டும், அப்போது கருத்து சொல்கிறேன். மக்களவை தேர்தலில் வைத்த கூட்டணி இப்போதும் தொடர்கிறது. 2021லும் அதிமுகவை சேர்ந்தவர் தான் முதல்வராக இருப்பார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கூட்டணி கட்சிகளும் பிரகாசமான வெற்றி பெறுவார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகமாக நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு பாஜ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏற்கனவே மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு தலைவர்கள் உறுப்பினர்கள் மூலமாகத்தான் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதில் பேரம் நடைபெறுகிறதா? அதுபோல்தான் இதுவும் நடைபெறும். எப்படி நடந்தாலும் மக்கள் தான் ஓட்டுப்போட்டு உறுப்பினரை தேர்வு செய்கிறார்கள். இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டது அந்நாட்டு மக்களின் முடிவாகும். பலரின் கோரிக்கைகளை ஏற்று அனைவரும் நலத்திட்டத்தை பெறும் வகையில் சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி அட்டையாக மாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு அத்தியாவசிய பொருட்கள் இருப்பு உள்ளது. தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடியில் அதிக மழை பெய்துள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. மழைக்காலம் முடிந்தவுடன் குடிமராமத்து பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

உள்ளாட்சித் தேர்தலை சட்டரீதியாக தடுத்து நிறுத்த முடியாது. மாநில தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் நடத்துவதற்கான உறுதியை அளித்துள்ளது. உறுதியாக அதிமுக தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறும். தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கும் எண்ணம் இதுவரை இல்லை. எல்லா மாவட்டங்களிலிருந்தும் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சாரை சாரையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Tags : election ,Chief Minister ,Edappadi Palanisamy , Edappadi Palanisamy
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...