×

தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் ‘பாவமா, பஞ்சை பராரியாக, மனு கொடுக்க வந்திருக்கீங்களே...’ அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சால் சர்ச்சை

மதுரை: ‘‘பாவமா, பஞ்சை பராரியாக, தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்த உங்களை பார்க்கும்போது எனக்கே பாவமாக இருக்கிறது’’ என  பொதுமக்களை பார்த்து, அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம், மதுரை வடக்கு தொகுதி சார்பில் செல்லூர் 50 அடி ரோட்டில் நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ‘‘உங்களை பார்க்கும்போது எனக்கு பாவமாக இருக்கிறது. பஞ்சையாய், பராரியாய் தலையில் எண்ணெய் இல்லாமல் கூட, மாவட்ட கலெக்டரை பார்த்து மனு கொடுக்க வந்திருக்கிறீர்கள்.

ஆண்களை விட பெண்கள் தான்  இங்கே அதிகளவில் மனு கொடுக்க வந்திருக்கிறீர்கள். ஆண்களை விட பெண்களுக்கு தான் ஒன்றரை மடங்கு சக்தி அதிகம். ஆனால் பெண்கள் அதனை வெளியே காட்டி கொள்ள  மாட்டார்கள். நடைபெறவுள்ள  உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு பெண்கள் போட்டியிடலாம்’’ என்று பேசினார்.

முதியவரை அறைய சென்ற அமைச்சர்
முகாமில் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் மனுக்களை வழங்க, நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் மேடை ஏற முயன்றனர். அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு கீழே தள்ளிவிட்டு மேடை ஏறினர். இதனை கவனித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, மேடையை விட்டு கீழே இறங்கி வந்தார். அவரிடம் மனு கொடுக்க பலர் சூழ்ந்தனர். ஏற்கனவே காய்ச்சல் காரணமாக சற்று தளர்ந்திருந்த அவர் கூட்டநெரிசலில் சிக்கியதால், ஆத்திரத்தில் ஒரு முதியவரை கன்னத்தில் அறைய சென்றவர், சுதாரித்து முதுகில் கைவைத்து தள்ளிவிட்டார்.


Tags : Selur Raju ,speech , Minister Selur Raju
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு...