×

மருத்துவ படிப்பில் பொதுத்தொகுப்பில் பிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு எங்கே? மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

சென்னை: மருத்துவ படிப்புக்கான பொதுத்தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஏன் வழங்கவில்லை என்று மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பெரும்புதூர் மக்களை உறுப்பினருமான டி.ஆர்.பாலு மக்களவையில் நேற்று பேசியதாவது: வருகிற 26ம் தேதி நமது அரசியல் சட்டம் ஏற்றக் கொள்ளப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவை கொண்டாட உள்ள மகிழ்ச்சியான தருணத்தில் அரசியல் சட்டப்பிரிவு பிரிவின்படி கல்வியில் வழங்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவப்படிப்பு(எம்பிபிஎஸ், பிடிஎஸ்) மாணவர்களுக்கான தொகுப்பில் வழங்கப்படவில்லை. 2017-2018ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பிற்கான பொது தொகுப்பிற்கு 9966 இடங்களை மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அளித்துள்ளன.

அவற்றில் அரசியல் சட்டப்படி 2689 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மாநில கல்லூரிகளிலும், தனியார் கல்லூரியிலும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 260 மாணவர்கள் மட்டுமே மத்திய அரசு கல்லூரிகளில் ேசர்க்கப்பட்டுள்ளனர். எனவே, 2499 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசியல் சட்டப்படியான வாய்ப்புகள் கல்வியில் மறுக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. மேலும் 2018-2019ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பிற்கான பொது தொகுப்பிற்கு 12,595 இடங்களை மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அளித்துள்ளன. இவற்றில் அரசியல் சட்டப்படி 3400 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மாநில கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 299 மாணவர்கள் மட்டுமே மத்திய அரசு கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, 3101 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசியல் சட்டப்படியான வாய்ப்புகள் கல்வியில் மறுக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டின் மருத்துவ கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான பொது தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக 27 சதவீத இடஒதுக்கீடு கூட அரசியல் சட்டப்பிரிவுகளின்படி வழங்கப்படவில்லை. மத்திய அரசு அடுத்த கல்வியாண்டிலாவது அரசியல் சட்டத்தின் மாண்புகளை காப்பாற்றும் வகையில் மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத்திய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Baloo ,general ,Lok Sabha ,DR , Clinical studies, potuttokuppu, PC, LS, TR Baalu
× RELATED வாக்கு சதவீத முரண்பாடு கவலை தருகிறது: சீதாராம் யெச்சூரி