×

‘மனுக்களை உயரதிகாரிகள் வரை கொண்டு செல்லும்’ பொதுமக்களிடம் புகார்களை பெற பெண் உருவ `சைபிரா’ ரோபோ: வாய்ஸ் மெசேஜ் மூலமாகவும் புகார் தரலாம்

திருமலை: பொதுமக்களிடம் புகார்களை பெற பெண் உருவ `சைபிரா’ ரோபோ ஆந்திராவில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயந்திரமயமான உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சைபர் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சைபர்  குற்றங்கள் மற்றும் இதர வழக்குகளில் பொதுமக்கள் புகார்களை அளிப்பதற்காக புதிய பெண் ரோபோவை விசாகப்பட்டினம் போலீசார் நேற்றுமுதல் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மகாராணிபேட்டை காவல் நிலையத்தில் மிஸ் `சைபிரா’ எனும் ரோபோ பணியமர்த்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோ டிஜிட்டல் முறையில் புகார்தாரர் செல்போன் எண், என்ன புகார் என்பதை பெறும். மேலும் வாய்ஸ் மெசேஜ் மூலமாகவும் ரோபோ கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிவித்தால் அதுவே புகார்களை பெற்று  சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கும். 24 மணி நேரத்திற்குள் ரோபோ அனுப்பிய புகாரின் மீது விசாரணை அதிகாரி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது குறித்து பதில் தரவேண்டும். அவ்வாறு தராத பட்சத்தில் அதன் அடுத்தக்கட்ட உயர் அதிகாரிக்கு அந்த புகார் மாற்றி அனுப்பப்படும்.

அடுத்தக்கட்ட அதிகாரியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு மேல் உள்ள அதிகாரி என காவல்துறை ஆணையாளர் வரை இந்த புகார் படிப்படியாக கொண்டு செல்லும். சுமார் மூன்றரை மணி நேரம் சார்ஜ் செய்தால் 24 மணி நேரம் சைபிரா ரோபோ பணிபுரியும். இதனால் பொதுமக்களுக்கு புகாரின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க பயனுள்ளதாக இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சோதனை முறையில் மகாராணி பேட்டை காவல் நிலையத்தில் மிஸ் சைபிரா ரோபோ நியமிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களிடம் இதன் வரவேற்பை பொறுத்து மேலும் பல காவல் நிலையங்களுக்கு விரிவுபடுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags : public , Petition, complaint, `cyber telephone robot, voice message
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...