உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் திருச்சிக்கு 8ம்இடம்: கடைசியில் உள்ள அரியலூரில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்

திருச்சி: சுற்றுலாவை ஊக்குவிக்க மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதன் மூலம் அந்நிய செலாவணி அதிகரிப்பதுடன்  பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது.  ஊட்டி, குன்னூர், கோத்தகிரி,  மாமல்லபுரம், தஞ்சை பெரியகோயில், தஞ்சை அலையாத்தி காடுகள், சென்னை மெரினா கடற்கரை, கன்னியாகுமரி கடற்கரை, குற்றாலம், மேற்கு தொடர்ச்சி மலைகள், ராமேஸ்வரம் என பல முக்கிய சுற்றுலா தலங்கள் இருப்பதால்  தமிழகத்திற்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்திற்கு 34.50 கோடி உள்நாட்டு  சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 48.60 லட்சம் பேர் வந்துள்ளனர். 2018ல்  உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 38.59 கோடி பேரும்,  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 60.73 லட்சம் பேரும் வந்துள்ளனர்.

இது போல திருச்சி மாவட்டத்திற்கும்  உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறு, முக்கொம்பு பூங்கா, மலைக்கோட்டை, ரங்கம் கோயில் என பல சுற்றுலா தலங்கள் உள்ளன.அதே நேரத்தில்  உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் திருச்சி மாவட்டம் முறையே 8, 5ம் இடங்களை பெற்றுள்ளது. தமிழகத்தில்  உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தந்த மாவட்டம்  காஞ்சிபுரம்.  இங்கு 4.19 கோடி பேர் கடந்த ஆண்டு சுற்றுலா வந்துள்ளனர். சென்னை மாவட்டம் இரண்டாமிடம்(3.82 கோடி பேர்) பிடித்துள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு 1.94 கோடி பேர் வந்துள்ளனர். இதன் மூலம் திருச்சி மாவட்டம் 8வது இடத்தில் உள்ளது. ராமநாதபுரம் 3வது இடத்திலும்,  திண்டுக்கல் 4ம் இடத்திலும், தஞ்சை 5ம் இடத்திலும் உள்ளன.

வெளிநாடு: வெளிநாட்டு சுற்றுலா பணிகள்அதிகம் வருகை தந்த மாவட்டமாக சென்னை உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 25.24 லட்சம் பேர் வந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 17.15 லட்சம் பேர் வந்துள்ளனர். இந்த மாவட்டத்திற்கு 2ம் இடம் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்த இடங்கள் தஞ்சை, மதுரைக்கு  கிடைத்துள்ளன. திருச்சி மாவட்டம் 5ம் இடத்தை பிடித்துள்ளது. இங்கு கடந்த ஆண்டு 27.28 லட்சம் பேர் வந்துள்ளனர். தமிழக அரசின் சுற்றுலாத்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஆண்டுதோறும் தேசிய அளவிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதைப்போலவே தமிழ் நாட்டில் சுற்றுலாத்துறையில் மாவட்ட வாரியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.  உள்நாட்டு   சுற்றுலா பயணிகள் வருகையில் பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்கள் கடைசி 3  இடங்களை பிடித்துள்ளது. சுற்றுலாத்துறையில் பின்தங்கியுள்ள  மாவட்டங்களில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த புதிதாக சுற்றுலா திட்டங்கள் உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றனர்.

Tags : Trichy ,Ariyalur , Domestic Tourists, Trichy, Ariyalur, Tourism
× RELATED இரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை