×

குமரி கடலோர கிராமங்களில் இன்று உலக மீனவர் தின கொண்டாட்டம்: கடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

நாகர்கோவில்: குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் இன்று உலக மீனவர் தின கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் 48 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர் தினத்தையொட்டி இன்று இந்த கடலோர கிராமங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் படகுகள் அர்ச்சிப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. மீனவர் தினத்தையொட்டி சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள், விசைப்படகுகள் துறைமுக பகுதிகளில், கரை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கடலுக்கு சென்றிருந்த மீனவர்களும் பெரும்பாலும் கரை திரும்பியிருந்தனர்.  குமரி மாவட்டம் பள்ளம் துறையில் இன்று காலையில் பங்குதந்தை சூசை ஆன்றனி தலைமையில் புனித மத்தேயு ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து கடற்கரைக்கு ஊர்வலமாக சென்ற மீனவர்கள் படகுகளுக்கு அர்ச்சிப்பு செய்து வழிபட்டனர். மீன்பிடி உபகரணங்களுக்கும் பூஜை செய்யப்பட்டது. கடலில் மலர் தூவியும் வணங்கினர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். கேக் வெட்டி மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம் பகுதிகளிலும் மீனவர் தினம்  கொண்டாடப்பட்டது.

குளச்சல், ராஜாக்கமங்கலம் துறை உள்ளிட்ட பல்வேறு கிராம கிராமங்களில் மீனவர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கொட்டில்பாடு, குறும்பனை, வாணியக்குடி, தூத்தூர் மண்டல மீனவ கிராமங்களிலும் மீனவர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்றது. குளச்சலில் தெற்காசிய மீனவர் தோழமை சார்பில் பாதிரியார் சர்ச்சில் தலைமையில் விசைப்படகில் கடலில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மீனவர் அமைப்புகள் சார்பில் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் கடற்கரை கிராமங்களில் நடைபெற்று வருகின்றன. குளச்சலில் இன்று மாலையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் உலக மீனவர் தினத்தையொட்டி, பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags : World Fishermen ,Day Celebration ,Kumri Coast Kumri Coast , Kumari, World Fishermen's Day Celebration
× RELATED ஹூண்டாய் மோட்டார் இந்திய தொழிற்சாலையில் 53வது தேசிய பாதுகாப்பு தினவிழா