×

திருமழிசை பேரூராட்சியில் வீடுகளில் போர்வெல் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சி டேங்கர் லாரிகளில் விற்பனை

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில், வீடுகளில் போர்வெல் அமைத்து டேங்கர் லாரிகளில் நிலத்தடி நீர் திருட்டு நடக்கிறது. இதனால் நிலத்தடிநீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருமழிசை பேரூராட்சி உள்ளது. இப்பகுதியில், இருமருங்கிலும் உள்ள விவசாய நிலங்கள் செங்கல் சேம்பர்களுக்கு என இரக்கமின்றி சுரண்டப்படுகின்றன. மேலும், அரசு மேல்நிலை பள்ளி அருகே உள்ள வீடுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி, ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 டேங்கர் லாரிகளில் சென்னை நகருக்குள் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு டேங்கர் தண்ணீரும் ரூ.3 ஆயிரம் வரை விற்கின்றனர். இதுவும், அனுமதியின்றி நடைபெற்று வருவதால், நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள், தங்களது விளைநிலத்தில் பயிரிட முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

1987ம் ஆண்டு இயற்றப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதி நிலத்தடிநீர் (ஒழுங்குமுறை) சட்டத்தின்படி சென்னையை சுற்றியுள்ள 302 கிராமங்களில் நிலத்தடி நீரை வணிக நோக்கத்துக்காக எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனியார் டேங்கர்கள் மட்டுமின்றி அரசு சார்ந்த வாரியங்களும் இந்த தடையை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எனவே, திருமழிசை பேரூராட்சியில் நிலத்தடிநீரை உறிஞ்சி டேங்கர் லாரிகளில் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : homes ,Borewell ,Thirumazhisi Peruratchi , Thirumuzhayasi, Peruranchi, Borewell, Ground Water, Sales
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை