×

கிருஷ்ணகிரியில் மகளிர் போலீஸ் நிலையத்தில் வாலிபரை கொன்றதாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய கும்பலுக்கு போலீஸ் வலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாலிபரை கொன்றதாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்தியா (வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் பெருமாளை பிரிந்து சென்ற சத்தியா தொகரப்பள்ளி பகுதியை சேர்ந்த பிரதாப் (21) என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை அறிந்த சத்தியாவின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அப்போது சத்தியாவை அவரது சகோதரர் கவியரசு (25) தாக்கினார்.

இதைதடுக்க வந்த பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசான கலைராணி, மகேஸ்வரி, தியாகவதி ஆகியோரும் தாக்கப்பட்டனர். 3 பேரும் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கவியரசுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லாக்கப் டெத் நடந்துவிட்டதாக கூறி ஒரு வீடியோ பரவியது. கவியரசுவை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாக இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. பொய்யான இந்த வீடியோவை வெளியிட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : women ,Krishnagiri ,police station ,teenager ,district ,gangster , Krishnagiri district,women's,police station,slammed,killing
× RELATED இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு