×

இன்று (நவ.21) சர்.சி.வி.ராமன் நினைவு நாள் ‘விளைவால்’ உயர் விருது பெற்ற விஞ்ஞானி

ஒரு கவிஞர் வானம், கடலை பார்க்கிறார். கற்பனைக்குதிரையை தட்டி விடுகிறார். கவிதைகள் பிறக்கின்றன. பறக்கின்றன. ஆனால், ஒருவர் இரண்டையும் பார்க்கிறார். ஆச்சரியப்படுகிறார். வானமும், கடலும் நீல நிறமாக தோன்றுகிறதே ஏன்? எதற்காக என்று ஆழமாக சிந்திக்கிறார். விளைவு... பிறந்தது ராமன் விளைவு. அந்த சிந்தனைக்கு பரிதாக கிடைத்தது உயரிய விருதான நோபல் பரிசு. அவர்தான் சர்.சி.வி.ராமன். சர்.சி.வி.ராமன் திருச்சியில் நவ.7, 1888ம் ஆண்டு சந்திரசேகர் - பார்வதி அம்மாவுக்கு மகனாக பிறந்தார். சந்திரசேகர  வேங்கட ராமன் என்ற அவரது பெயரே, ‘சர்’ பட்டம் பெற்றதையடுத்து சர்.சி.வி.ராமன் ஆனது. ராமனின் தந்தை சந்திரசேகர் கணிதம், இயற்பியல் கற்ற பேராசிரியர் என்பதால், இளம் வயதிலேயே ராமன் இரண்டிலுமே தேர்ந்த கில்லாடியாக திகழ்ந்தார்.

பின்னர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். படிப்பை முடித்ததும் கோல்கத்தாவில் தலைமைக்  கணக்கு அலுவலராக பணியாற்றினார். பணி நேரம் போக ஓய்வு நேரத்தில், இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்திற்கு சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். அங்கு ஒலியியல், ஒளியியல்  ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். நாளடைவில் அரசுப்பணியை உதறி தள்ளி விட்டு ஆய்விலேயே மூழ்கினார். இதையடுத்து கல்கத்தா பல்கலைக்கழகம் சர்.சி.வி.ராமன் அவர்களுக்கு இயற்பியலில் ‘சார்  தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. அடுத்த பதினைந்து  ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது  ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான  அங்கீகாரத்தை பெற்றது.

1929ம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசு அவருக்கு ‘நைட் ஹீட்’ என்ற பட்டம், இங்கிலாந்து அரசியால் ‘சர்’ பட்டமும்  அளிக்கப்பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக, இவருக்கு ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த  கண்டுபிடிப்புக்கு ‘ராமன் விளைவு’ என்று பெயரிடப்பட்டது. அதென்ன ‘ராமன் விளைவு’ ஒருமுறை அவர் கடல் பயணம் மேற்கொண்டார். அப்போது கடல், வானை பார்த்த போதுதான், ஏன் இரண்டும் நீலமாக இருக்கிறது என யோசித்தார். இந்த ஒளிச்சிதறலே `ராமன் விளைவுக்கு’ வித்தானது. அது படிப்போ, ஆராய்ச்சியோ அவருக்கு பல கேள்விகள் எழும். அதற்கான முழுத்தீர்வு கிடைக்கும் வரை விட மாட்டார். அதனால்
தான் அவரால் நோபல் பரிசு பெறும் அளவுக்கு உயர முடிந்தது.

1954ம் ஆண்டில் ‘பாரத ரத்னா’ விருது,  1957ம் ஆண்டில் லெனின் அமைதிப்பரிசும் பெற்றார். இவரது மார்பளவு சிலை கொல்கத்தாவின் பிர்லா இண்டஸ்டரியல் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில்  வைக்கப்பட்டுள்ளது. ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட பிப்ரவரி 28ம் தேதியைத்தான் நாம்  `தேசிய அறிவியல் தினம்’ என கொண்டாடி வருகிறோம். ஆராய்ச்சிகளே வாழ்க்கை என முடிவெடுத்த சர்.சி.வி.ராமன், 1930ல்  பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில் இயக்குனராக சேர்ந்தார்.

பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு  இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார். 1947ம்  ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசில் முதல் தேசிய  பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948ம் ஆண்டு, இந்தியன்  இன்ஸ்டிடியூட்டில் இருந்து  ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து,   பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு தனது வாழ்நாளின் இறுதி வரை பணியாற்றினார். நம் நாட்டுக்கு கிடைத்த அற்புத விஞ்ஞானியை, அவர் பிறந்த மாதமான நவம்பர் 21ம் தேதி, 1970ம் ஆண்டு இயற்கை பிரித்து அழைத்து சென்றது.

Tags : Scientist ,Sir ,CV Raman Memorial Day , Sir C.V Raman Memorial Day,C.V Raman,November 21
× RELATED ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய...