ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது, கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது.. நிபந்தனைகளுடன் ஆயுள் கைதி ராபர்ட் பயஸ்க்கு பரோல் வழங்கியது நீதிமன்றம்

சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் 30 நாட்கள் பரோல் வழங்கியது. மகனின் திருமணத்திற்காக  பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நளினி பின்பற்றிய நிபந்தனைகளை ராபர்ட்  பயஸும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ராபர்ட் பயஸ் பரோல் கோரி மனு

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில்  ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர் ராபர்ட் பயஸ். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், “ என் மகன்  தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. இதற்காக 30 நாட்கள்  ‘பரோல்’ வழங்குமாறு கோரி சிறைத்துறை ஐஜிக்கு மனு கொடுத்தேன். எனது மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, எனது கோரிக்கையை பரிசீலித்து பரோல் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று  கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது ராபர்ட் பயஸின் மனு சிறைத்துறையின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 ராபர்ட் பயஸ்க்கு பரோல்

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிபந்தனைகளுடன் ராபர்ட்  பயஸ்க்கு 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.

ராபர்ட் பயஸ்க்கு பிறப்பித்த நிபந்தனைகள்

*பரோல் காலத்தில்ஊடகங்களுக்கு பேட்டி எதுவும் தரக்கூடாது.

*பரோல் காலத்தில்  அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது.

*பரோல் நிபந்தனைகளை மீறினால் பரோல் ரத்து செய்யப்படும்.

*ஒரு வார காலத்துக்குள் தங்குமிடம், உறவினர், நண்பர்கள் பற்றிய விவரங்களை போலீசிடம் வழங்க வேண்டும்.

Related Stories:

>