×

வலுக்கட்டாயமாக நிர்ப்பந்தப்படுத்தக் கூடாது: தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களில் பெண்களுக்கு இரவு பணி: கர்நாடகா அரசு அனுமதி

பெங்களூரு: இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பெண் ஊழியர்கள் மீதான குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக புகார் எழுந்தது.  இதுகுறித்து ஆராய கர்நாடக அரசு சட்டப்பேரவை குழு கடந்த 2017ம் ஆண்டு ஒன்றை அமைத்தது. இக்குழு அரசுக்கு வழங்கியுள்ள பரிந்துரையில், கர்நாடகாவில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் இனி பெண் ஊழியர்களுக்கு இரவுநேர பணி வழங்க  வேண்டாம் என தெரிவித்தது. மேலும், ஐ.டி. மற்றும் பயோ டெக்னாலஜி நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு காலை அல்லது மதிய பணியை வழங்கவும், ஆண்களுக்கு மட்டும் இரவு பணி வழங்கலாம் என்றும் பரிந்துரை  செய்தது.

அத்துடன், பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதில்லை என்றும் கர்நாடக சட்டப்பேரவை குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், பெண் சிசு கொலை செய்யும் மருத்துவர்கள்,  செலிவியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களில் இரவு ஷிப்ட்களில் (இரவு 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) பணிபுரிய பெண்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பிற நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இரவு ஷிப்ட்டுகளில் பெண்கள் பணியாற்ற அணுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கர்நாடக மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அனைத்து தொழிற்சாலைகளிலும் இரவு 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான ஷிப்ட்களில் பெண்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்ததாவது, தொழில் நிறுவனங்கள் அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளை பின்பற்றி தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை இரவு ஷிப்ட்களில் முழு நேரமாகவோ,  பகுதி நேரமாகவோ பணியமர்த்திக் கொள்ளலாம். ஆனால், பெண் ஊழியர்களை வற்புறுத்தி வலுக்கட்டாயமாக பணிபுரிய நிர்ப்பந்தப்படுத்தக் கூடாது. இரவு ஷிப்ட்களில் பணிபுரிய விருப்பமுள்ள பெண் ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி  பெற்ற பின்னரே அவர்களை இரவு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Women ,companies ,Karnataka ,Karnataka Govt , Karnataka Govt approves women's night jobs in IT sector
× RELATED கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்