×

மேலவளவு படுகொலை சாதாரணமானதல்ல விடுவிக்கப்பட்ட 13 பேரையும் தாமாக எதிர்மனுதாரராக சேர்ப்பு :ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி நடவடிக்கை உள்துறை செயலர் அறிக்கை தரவும் உத்தரவு

மதுரை:மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை வழக்கில் கைதாகி ஆயுள்தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம் உட்பட 13 பேர், எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி பொது  மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.இவர்கள் விடுதலையை எதிர்த்து வக்கீல் ரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். அதில், 13 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் அரசாணையை தனக்கு வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறைத்துறை டிஐஜி பழனி, எஸ்பி ஊர்மிளா ஆகியோர் ஆஜராகினர்.அரசு வக்கீல் தினேஷ்பாபு ஆஜராகி, 13 பேர் விடுதலைக்கான அரசாணை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தார். மேலும் இதே வழக்கில் தொடர்புடைய 3 பேர் ஏற்கனவே முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார். அப்போது  மனுதாரருக்கு அரசாணை நகல் வழங்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி, 13 பேரை முன்கூட்டி விடுவித்த அரசாணையை எதிர்த்து மனுதாரர் மனு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இவ்வழக்கில் 13 ேபரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.  எனவே, 13 பேரையும் எதிர்மனுதாரர்களாக இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்க்கிறது. 13 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை  செயலர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதில், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படாததால் மனுதாரர் ஏற்கனவே சீராய்வு மனு செய்துள்ளார். அதில், இது சாதாரணமாக நடந்த கொலை அல்ல. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பஞ்சாயத்து தேர்தல் நடவடிக்கையில்  பங்கேற்பதை தடுக்கும் வகையில் தீவிரவாதத்துடன் நடத்தப்பட்டது என கூறப்பட்டுள்ளது.சட்டரீதியாக பெற முடியாததை வன்முறையின் மூலம் பெற நினைத்துள்ளனர். எனவே, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அரசுத்தரப்பில் ஏன் அப்பீல் செய்யவில்லை? விடுவிக்கும் முன் இதுபோன்ற காரணங்கள்  அரசுத்தரப்பில் ஆராயப்பட்டதா? இவர்களை முன்கூட்டியே விடுவிப்பதை எதிர்த்து ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர் கோரிக்கை குறித்து 6 மாதத்தில் பரிசீலிக்க வேண்டுமென உத்தரவாகியுள்ளது.இதன்படி, விடுவிக்கும் அரசாணைக்கு முன்பாக, மனுதாரர் தரப்புக்கு அரசுத்தரப்பில் ஏதேனும் விளக்கமளிக்கப்பட்டதா? முன்கூட்டி விடுவிப்பதில், சீனியாரிட்டி அடிப்படை பின்பற்றப்பட்டதா? எத்தனை ேபர் தங்களை முன்கூட்டி விடுவிக்க  விண்ணப்பித்தனர். அதில், 13 பேரின் நிலை என்ன? இன்னும் எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது? அரசாணை வெளியிடும் முன் பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டதா? அவர்களது பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை  எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கையில் இருக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ. 25க்கு தள்ளிவைத்தனர்.

Tags : killings ,Home Secretary ,Icort Madurai Branch Action , normal,released, Negative Adversary, Icort Madurai Branch Action,report
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...