×

அம்பத்தூர் ஏரியில் டன்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய்தொற்று அபாயம்

அம்பத்தூர்: சென்னையை ஒட்டிய அம்பத்தூர் ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது, அப்பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் அம்பத்தூர் ஏரி நிறைந்திருந்தது. மேலும், இங்கு அம்பத்தூரை சுற்றியுள்ள பருத்திப்பட்டு, அயப்பாக்கம் ஏரிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்தது. அந்த நீருடன் கழிவுநீரும் கலந்து அம்பத்தூர் ஏரியில் கலந்து வந்தது. இதோடு மட்டுமின்றி அம்பத்தூர், அயப்பாக்கம், திருமுல்லைவாயல் பகுதிகளில் உள்ள வீடுகளின் கழிவுநீரும் அம்பத்தூர் ஏரியில் கலந்து வருகின்றன. இந்நிலையில், அம்பத்தூர் ஏரியில் நேற்று முதல் டன்கணக்கிலான மீன்கள் செத்து மிதக்கின்றன. அவற்றை பறவைகள் கொத்தி எடுத்து சென்று, அப்பகுதி வீடுகளில் போட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள வீடுகளில் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றன.

மேலும், அப்பகுதி மக்கள் பல்வேறு சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஏரியில் ஆங்காங்கே மீன்கள் செத்து கிடப்பதாலும் துர்நாற்றம் வீசுகிறது. இதோடு மட்டுமின்றி ஏரியில் செத்து கிடக்கும் மீன்களால் தண்ணீரும் மாசடைந்து வருகிறது. இந்நீரை அருந்தும் கால்நடைகளுக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுப்பணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நேற்று சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். எனினும், இவற்றின் தீவிரத்தை உணராமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால் அம்பத்தூர் பகுதி மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அம்பத்தூர் ஏரியில் டன்கணக்கில் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : lake ,Ambattur ,Ambattur lake , Ambattur lake, fishes, infection
× RELATED வருசநாடு அருகே கெங்கன்குளம்...