கீரமங்கலத்தில் இடிந்து விழும் அபாயத்தில் பயணியர் நிழற்குடை: பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சம்

அறந்தாங்கி: கீரமங்கலத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை இடித்துவிட்டு புதிதாக கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி சார்பில் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் கீரமங்கலம் திருவள்ளுவர் மன்றம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடையை கீரமங்கலம் தெற்கு, கீரமங்கலம் மேற்கு மற்றும் பேட்டை பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தினசரி ஏராளமான மக்கள் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை செல்வதற்கு இந்த பயணியர் நிழற்குடையில் காத்திருந்து பேருந்துகளில் சென்று வந்தனர்.

கீரமங்கலம் பேரூராட்சி இந்த நிழற்குடையை முறையாக பராமரிக்காததால், நிழற்குடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. தற்போது பெய்த மழையில் நிழற்குடையின் மேல்பகுதியில் தண்ணீர் தேங்கியதால், இடிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் நிழற்குடையின் மேல்பகுதியில் இருந்து தண்ணீர் நிழற்குடையின் உள்ளே ஒழுகுகிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழைக்காலங்களில் நனைந்தபடியே பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கீரமங்கலம் திருவள்ளுவர் மன்றம் அருகே இடிந்துவிழும் நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை பயன்படுத்தும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இடிந்துவிழும் நிலையில் உள்ள நிழற்குடையை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories:

>