×

மதுரை அரசு மருத்துவமனையில் பழுதான சுத்திகரிப்பு இயந்திரங்கள்: நோயாளிகள் கடும் பாதிப்பு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பழுதான சுத்திகரிப்பு இயந்திரங்களை பழுது நீக்கி நோயாளிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காரணம் மருத்துவமனை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்தும் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதுதான். மருத்துவமனையில் போடப்பட்ட புதிய போர்கள் மூலம் கிடைக்கும் தண்ணீர் மற்றும் மாநகராட்சி லாரிகள் மூலம் வழங்கும் தண்ணீரை வைத்தே ஓரளவு தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு,  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி - சக்தி பீடம் என்ற அமைப்பு, மருத்துவமனைக்கு இரு சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கியது.

மருத்துவமனை காவல் நிலையத்திற்கு எதிர்புறமும்,  ஆடிட்டோரியத்திற்கு எதிரேயும் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டது. ஆனால் இந்த இரு இயந்திரங்களிலும் ஒரு சில நாட்கள் மட்டுமே குடிநீர் வந்தது. அதன்பின் தண்ணீர் வரவில்லை.  ஓராண்டுக்கு மேலாகியும் இந்த இரு  சுத்திகரிப்பு இயந்திரங்களிலும் தண்ணீர் கிடைக்கவில்லை. தற்போது இந்த  சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, `மேல்நிலைத்தொட்டிக்கு பம்ப் மூலம் ஏற்றப்படும் தண்ணீர் குறைந்ததால்,  சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு தண்ணீர் வரும் வால்வு அடைக்கப்பட்டு விட்டது. புதிய போர் அல்லது போதுமான தண்ணீர் கிடைத்தால் வால்வு திறக்கப்பட்டு, மீண்டும் தூய குடிநீர் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை ஆர்வலர்கள் கூறும்போது, ‘தற்போது தொடர்மழை பெய்து வருகிறது. மருத்துவமனை அருகே உள்ள வைகை ஆற்றில், தரைப்பாலங்கள் மூழ்கும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே மதுரை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட இரு சுத்திகரிப்பு இயந்திரங்களையும் பழுது பார்த்து, குறைந்தபட்சம் இந்த இரு இடங்களிலாவது சுத்தமான குடிநீர் கிடைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Madurai Government Hospital , Madurai Government Hospital, Spam Cleaners
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...