ஆஸ்திரேலியாவில் நீடிக்கும் காட்டுத்தீயால் சிட்னி நகரை சூழ்ந்த புகை மூட்டம்: சுவாசிக்க முடியாமல் மக்கள் சிரமம்

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தி வரும் காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் சிட்னி நகரை சூழ்ந்துள்ளது. இதனால் சிட்னி நகர் மக்கள் சுவாசிக்க சிரமம் அடைந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சிட்னி நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்ததால் காட்டுத்தீயின் தாக்கமும் அதிகரிக்க, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கருகின. இதனால் ஏராளமானோர் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து, காட்டுத்தீயின் தாக்கம் தணியாத நிலையில் சிட்னி நகரை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. வெண்போர்வை போர்த்தியது போல் சூழ்ந்திருக்கும்  புகை மூட்டத்தால் சிட்னி வாசிகள் சுவாசிக்கவே கடும் சிரமமடைந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் காட்டுத்தீயால் நேரிட்ட விபத்துகளில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 300 வீடுகள் சாம்பலாகி உள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தீக்கிரையாகி உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயீன்ஸ்லாண்ட் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை மூட்டம் தற்போது சிட்னியை முற்றுகையிட்டுள்ளது. சிட்னியின் பாரம்பரிய சின்னங்களாக கருதப்படும் சிட்னி ஹார்பர் பிரிட்ச் மற்றும் ஒப்பேரா ஹவுஸ் ஆகியவை புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. இதற்கிடையே காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என சிட்னி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: