×

சோனியாவின் எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து விவகாரம்: மக்களவையில் காங்., திமுக வெளிநடப்பு

புதுடெல்லி: சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர்களான காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு கடந்த 18 ஆண்டுகளாக எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அவர்களுக்கு தற்போது நேரடியாக எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாததால் எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கு காங்கிரசின் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மக்களவையில் இவ்விவகாரம் நேற்று எழுப்பப்பட்டது. எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து குறித்து விவாதிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் தரப்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். ஆனாலும், பூஜ்ய நேரத்தில் இவ்விவகாரத்தை காங்கிரஸ் அவைத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பினார். அவர் பேசுகையில், ‘‘சோனியா குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அவர்களுக்கான சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்யக் கூடாது. வாஜ்பாய் ஆட்சியில்கூட எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்படவில்லை. ஆனால், இப்போது ரத்து செய்யப்பட்டதில் அரசின் சதி வியப்பளிக்கிறது. காந்தி குடும்பத்தினருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு பாஜ.தான் பொறுப்பு. அரசு தான் பதில் சொல்லியாக வேண்டும்,’’ என்றார்.  இதற்கு திமுக எம்பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்,’’ என்றார். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ‘‘நீங்கள் (காங்கிரஸ்)  அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டு விட்டது.

பூஜ்ய நேரத்தில் இவ்விவகாரத்தை எழுப்ப நீங்கள் நோட்டீஸ் தரவில்லை. எனவே, உங்களால் பூஜ்ய நேரத்தில் இந்த விவகாரத்தை எழுப்ப முடியாது,’’ என்றார். இதனால், அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு காங்கிரஸ் எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், சோனியா தலைமையில் காங்கிரஸ், திமுக எம்பி.க்கள் சிறிது நேரம் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.  இதேபோல், மாநிலங்களவையில் ஜேஎன்யு மாணவர் விவகாரம் தொடர்பாக அமளி நிலவியது. சமீபத்தில், ஜேஎன்யு பல்கலை.யில் விடுதி கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி போராட்டம் செய்த மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டனர்.  போலீசார் நடத்திய தடியடியில் மாணவ, மாணவிகள் பலர் காயமடைந்தனர். எனவே, இது தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தன. உடனடியாக அரசு விளக்கம் அளிக்க கோரி இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவை கூடியதும் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பலமுறை எச்சரித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியை கைவிடாததால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும், ஜாலியன் வாலாபாக் நினைவிட அறக்கட்டளை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  1951ல் இயற்றப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிட அறக்கட்டளை சட்டத்தில், அறக்கட்டளை தலைவராக பிரதமரும், நிரந்தர உறுப்பினர்களாக காங்கிரஸ் தலைவர், கலாச்சார அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், பஞ்சாப் கவர்னர், பஞ்சாப் முதல்வர் ஆகியோரும், 5 ஆண்டு பதவிக்காலமாக நியமன உறுப்பினர்களும் இருப்பார்கள். இதில், நிரந்தர உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவரை மாற்றும் வகையிலான சட்ட திருத்த மசோதாதான் இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த கூட்டத்தொடரில், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இம்மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி.க்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதே சமயம், பாஜ கூட்டணி கட்சிகளும், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.  இதையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு அவையிலும் இம்மசோதா  நிறைவேற்றப்பட்டுள்ளதாலும், அடுத்ததாக ஜனாதிபதி ஒப்புதலோடு  சட்டமாக்கப்படும்.

காவலர் சீருடை  மறுபரிசீலனை
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் காவலர்கள் புதிய சீருடையில் வந்தனர். தலையில் டர்பனுடன் இந்திய பாராம்பரிய ஆடை வழங்கப்பட்டிருந்த நிலையில், ராணுவ வீரர்களைப் போல் ஆலிவ் பச்சை நிற புதிய சீருடையில் அவர்கள் வந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. இதேபோல், முன்னாள் ராணுவ வீரர்களும் புதிய சீருடைக்கு தங்கள் அதிருப்தியை அரசிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று அவைக்கு வந்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் கருத்துப்படி, காவலர்களின் புதிய சீருடை குறித்து தலைமைச் செயலகம் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடப்பட் உள்ளது,’’ என்றார்.

சபாநாயகர் எச்சரிக்கை
மக்களவையில் நேற்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சுமார் 20 எம்பி.க்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அவர்களை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை வலியுறுத்தியும் கேட்கவில்லை. இதனால், சபாநாயகர், ‘‘இன்று முதல் யாருமே அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு அமளி செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என எச்சரித்தார். ஆனால் அதன் பிறகு எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டபடியே இருந்தனர்.



Tags : SPG ,Sonia ,Lok Sabha , Sonia, SPG security, Lok Sabha, Congress. DMK, walkout
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...