×

சபரிமலை தரிசனத்துக்கு 139 தமிழக பெண்கள் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக, ஆன்லைன் மூலமாக தமிழகத்தை சேர்ந்த 139 இளம் பெண்கள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சபரிமலைக்கு ஆன்லைன் மூலம் இளம்பெண்கள் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் வரை 45 வயதுக்கு குறைவான 319 இளம்பெண்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்துள்ளனர். இதில், ஆந்திராவில் இருந்து மட்டும் 160 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 2வதாக தமிழ்நாட்டில் இருந்து 139 இளம்பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் இருந்து 9, தெலங்கானாவில் இருந்து 8, ஒடிசாவில் இருந்து 3 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது உண்மையான கணக்கு அல்ல என்றும், சிலர் வயதை தவறாக குறிப்பிட வாய்ப்பு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், கேரளாவில் இருந்து ஒரு இளம்பெண் கூட தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை ஆன்லைன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு மொத்தம் 16 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து இருந்தனர். கடந்த வருடம் சபரிமலையில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.
மண்டல காலத்தில் படிபூஜை: சபரிமலையில் நடைபெறும் பூஜைகளில் படிபூஜைக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை படிபூஜை நடத்த ₹75 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாத பூஜையின்போது படிபூஜை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் 6 நாட்களுக்கு படி பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டது. மண்டல காலத்தில் படிபூஜை நடத்தப்படுவது மிகவும் அபூர்வமாகும். இந்த படி பூஜை நடத்த 2035ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று தந்திரி கண்டரர் மகேஷ் ேமாகனர் தலைமையில் படிபூஜை நடந்தது.

வேலூர் சிறுமி தடுத்து நிறுத்தம் தந்தைக்கு மட்டும் அனுமதி
முதல் நாள் ஆந்திராவில் இருந்து தரிசனத்துக்கு வந்த 10 பெண்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல்,் நேற்று முன்தினம் நிலக்கல்லில் பஸ்சில் வந்த 2 இளம்பெண்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். நேற்று காலை வேலூரை சேர்ந்த ஒரு குழுவினர் இருமுடி கட்டுடன் சன்னிதானம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த குழுவில் இருந்த ஒரு சிறுமி மீது பம்பையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து பெண் போலீசார் அந்த சிறுமியின் வயது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமிக்கு 12 வயது என்பது தெரியவந்தது. உடனே சிறுமியை தரிசனத்துக்கு விடாமல் தடுத்து நிறுத்தினர். அவரது தந்ைதயை மட்டும் தரிசனத்துக்கு அனுமதித்தனர். சிறுமியை பம்பையில் தங்க வைத்துவிட்டு அவரது தந்தை இருமுடி கட்டுடன் தரிசனத்துக்கு சென்றார்.

பம்பை வரை வாகனத்தில் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
கடந்த ஆண்டு நிலச்சரிவை தொடர்ந்து பம்பையில் வாகனங்கள் நிறுத்த போலீசார் தடை விதித்தனர். கடந்த வருடம் 21 கிமீதொலைவில் உள்ள நிலக்கல்லில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து கேரள அரசு பஸ்சில் தான் பம்பைக்கு பக்தர்கள் செல்ல வேண்டும்.  இந்த நிலையில் மீண்டும் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்ந நீதிமன்றம் போலீசின் அறிக்கையை கேட்டது. இதையடுத்து பத்தனம்திட்டா ேபாலீஸ் எஸ்பி சார்பில் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலக்கல்-பம்பை இடையே வாகனங்களை அனுமதித்தால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் உயர்நீதிமன்றம் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நிராகரித்தது. பம்பை வரை பக்தர்கள் வாகனங்கள் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது. நீதிமன்றம் அளித்த உத்தரவில், பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை சென்றுவிட்டு அந்த வாகனத்தை நிலக்கல்லுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். பம்பையில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : women ,Sabarimala , 139 women , Sabarimala darshan
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...