×

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களை குறிவைத்து கன்டெய்னர் லாரிகள் நள்ளிரவில் முகாம்: ஹைடெக் முறையில் வாக்குகளை மாற்ற திட்டமா?; வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்து 234 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை நெருங்காத வகையில் துணை ராணுப்படையினர், உள்ளூர் போலீசார், அரசியல் கட்சி ஏஜென்ட்டுகள், தேர்தல் அதிகாரிகள் என பல வகையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. அதையும் மீறி வாக்கு எண்ணும் மையங்களில் நள்ளிரவு நேரத்தில் மிகப்பெரிய கன்டெய்னர் லாரிகள் சுற்றி சுற்றி வருகிறது. அதை வேட்பாளர்கள், ஏஜென்ட்டுகள் விரட்டி அடித்து வருகின்றனர். ஹைடெக் முறையை பயன்படுத்தி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை வேறு கட்சிக்கு மாற்ற ரகசிய திட்டமா என்ற சந்தேகம் வேட்பாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. இதையடுத்து 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி ைவக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்கிறது. அதற்கு நீண்ட நாட்கள் இருப்பதால் வாக்கு பெட்டிகள் மாற்றாமல் இருக்கவும், வாக்குகளை மாற்றாமல் தடுக்கவும், வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றாமல் இருக்கவும் துணை ராணுவப்படையினர் மற்றும் உள்ளூர் போலீசார், கட்சியினர் இரவு பகல் பார்க்காமல் வாக்குப்பதிவு மையத்தை பாதுகாத்து வருகின்றனர். எனினும், கடந்த சில நாட்களாக வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்றும், மின்சாரம் ‘கட்’ ஆவதாகவும், கம்ப்யூட்டர் நிபுணத்துவம் பெற்றவர்கள், ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைவதாக பண்ருட்டி வேட்பாளர் வேல்முருகன் குற்றம்சாட்டி இருந்தார். அதேபோல தூத்துக்குடி வாக்கு எண்ணும் மைய கல்லூரியிலும் நள்ளிரவில் கன்டெய்னர் லாரி வந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அங்கிருந்து லாரி கிளம்பியது. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் நள்ளிரவு நேரத்தில் கன்டெய்னர் லாரி எதற்கு வருகிறது என்று தெரியாமல் கட்சி ஏஜென்ட்டுகள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் தமிழக தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் இந்த தேர்தல் முடிந்தவுடன் மட்டும் ஏன் கன்டெய்னர் லாரிகள் வாக்கு எண்ணும் மையத்தை குறி வைத்து வருவது மர்மமாகவே இருக்கிறது. அதை திறந்து பார்த்து சோதனையிட வேண்டும் என்ற கோரிக்கையும் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது. இது தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைக்கு பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு தனியார் கல்வி குழும வளாகத்தில் அந்தந்த தொகுதிகளுக்கான பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அதோடு, அந்த அறைகளுக்கு மொத்தம் 178 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு 8 நாட்கள் ஆகிறது. இதனால், இந்த அறைகளில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அந்தந்த சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களால் அங்கீகாரம் பெற்ற தலைமை முகவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இதில், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அந்த தொகுதியின் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகிறதா என்றும், சீல் வைக்கப்பட்ட பகுதி எப்படி உள்ளது என்றும் நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள மையத்தில் அறை அருகே செவ்வாய்க்கிழமை இரவு கன்டெய்னர் லாரி வந்ததுள்ளது. அது ஏன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தது என்பது இதுவரையில் மர்மாகவே உள்ளது. இதேபோல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு எதிரே அந்த கல்விக் குழுமத்தின் ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளும் நடத்தி வருகின்றனர். பொதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 100 மீட்டர் வரையில் யாரும் வரக்கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால், இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி அளித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.55 முதல் தொடர்ந்து ஒரு மணி வரையில் மாதவரம் சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் சரியாக இயங்கவில்லை. அறையின் பின்புற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாதது சந்தேகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. இதற்கிடையே அதிமுக வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வந்தால் நுழைவாயில் பகுதியில் பரிசோதனை செய்யாமல் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் திமுகவினர் வந்தால் மட்டும் பலத்த சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் என்று குற்றம்சாட்டினார். ஆவடி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் சா.மு.நாசர் பத்திரிகையாளர்களிடம் கூறியது: ஆவடி சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் 2 அறைகளில் வாக்கு எண்ணக்கூடாது. ஒரே அறையில் தான் எண்ண வேண்டும் என்ற ஆட்சேபனையை தேர்தல் அதிகாரிகளிடம் கடந்த 7ம் தேதி கொடுத்திருந்தேன். இது குறித்து கூறும் போது ஒரே அறையில் எண்ணவேண்டும் தேவைப்பட்டால் தபால் வாக்குகள் மட்டும் எண்ண 2வது அறையை பயன்படுத்தலாம் என நேற்று வாய்மொழியாக உறுதி அளித்துள்ளனர். மேலும் இத்தொகுதியில் தபால் ஓட்டுக்கள் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக நடுகுத்தகை பாகம் எண் 4, வரிசை எண் 151 ல் உள்ள வெங்கடேசன் என்ற டீ கடை நடத்துபவருக்கு தபால் ஓட்டு எங்களது பிஎல்ஏ 2 புனிதவராஜ் என்பவரின் ஆட்சேபனையை மீறி பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல கோயில்பதாகை பாகம்  எண் 79, வரிசை எண் 383ல் உள்ள உதயசூரியன், பேச்சியப்ப நாடார் என்ற மளிகை கடையில் பணிபுரிகிறார். எங்களது பிஎல்ஏ 2 சுதாகரின் ஆட்சேபனையை மீறி வாக்கு பதிவு செய்துள்ளார். இது குறித்து கடந்த 13.04.2021 அன்று தேர்தல்  அதிகாரியிடம் புகார் பதிவு செய்துள்ளோம்.மேலும் இபிசி என சுமார் 300 வாக்குகள் பதியப்பட்டு இருப்பதாக அறிகிறோம். இது குறித்து முகவர்களிடம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. இது குறித்த பட்டியல் கேட்டு இருக்கிறோம். திருமுல்லைவாயில் பகுதியில் (பாகம் 150-ல்) பல குடும்பத் தலைவிகளின் பெயர் அவர்களுக்கே தெரியாமல் இபிசி என குறிப்பிட்டு வாக்கு தர மறுத்தபோது நாங்கள் மாவட்ட ஆட்சி தலைவரிடம் கூறி ஒட்டு வாங்கி கொடுத்தோம். ஆவடி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைத்திருக்கும் வளாகத்திற்குள் திடீர் திடீர் என்று ஆசிரியைகள் வருகிறார்கள். இது பற்றி கேட்டபொழுது வகுப்புகள் அவ்வப்போது நடைபெறுகிறது என கூறுகிறார்கள். இன்டர்நெட், வைபை உள்ளதால் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. இதை நிவர்த்தி செய்ய வேண்டுமென உங்கள் மூலமாக அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன். லேப்டாப்புடன் நுழைந்தவர்கள்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் பதிவான வாக்குகளுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கண்காணிப்பிற்கு நேற்று காலை வந்த திமுக முகவர்கள் லேப்டாப்களுடன் பேராசிரியர்களை அனுமதித்தது  தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.  தகவலறிந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கல்லூரிக்கு சென்று விசாரணை  செய்தார். தேர்தல் ஆணைய அதிகாரிகள், அண்ணா பல்கலை. நிர்வாகத்தை தொடர்பு கொண்டு ஆன்லைன் வகுப்புகளை வேறிடத்தில் நடத்த அறிவுறுத்தினர். இதனையடுத்து பேராசிரியர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். திமுக முகவர்கள் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் கல்லூரி பேராசிரியர்கள் என்ற பெயரில் லேப்டாப்களுடன் சென்றவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வேட்பாளர்கள் மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க உள்ளோம்’’ என்றனர்….

The post தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களை குறிவைத்து கன்டெய்னர் லாரிகள் நள்ளிரவில் முகாம்: ஹைடெக் முறையில் வாக்குகளை மாற்ற திட்டமா?; வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...