×

சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்றிக்கொள்ளலாம் 10 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு சலுகை: தேர்தலை ஒட்டி பொங்கலுக்கு நிதி வழங்க திட்டமா?

சென்னை: தமிழகத்தில் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ள 10 லட்சம் கார்டுகளை அரிசி பெறக்கூடிய கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்க உள்ள நிவாரண நிதியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொது விநியோக திட்டத்தில் தற்பொழுது 10,19,491 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, இன்று முதல் 26.11.2019 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வழக்கமாக, தமிழக அரசு பொங்கல் பண்டிகை மற்றும் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அரிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5000 வரை வழங்கி வந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளில் 1.85 லட்சம் பேர் அரிசி பெறும் கார்டுகளே வைத்துள்ளனர். ஆனால், சர்க்கரை கார்டு வைத்துள்ள சுமார் 10 லட்சம் குடும்பத்தினர் இந்த நிதி உதவியை பெறாத சூழ்நிலை இருந்தது.மேலும், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை கணக்கில் வைத்து மக்களை கவர, பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி குடும்ப அட்டைக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணம் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே தற்போதுள்ள சர்க்கரை கார்டுகளையும் அரிசி கார்டுகளாக மாற்ற தமிழக அரசு அவகாசம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று முதல் 26.11.2019 வரை  www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல்  அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.



Tags : election ,Pongal ,Sugarcard , Sugarcard , converted , rice card,ration cards?
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்