×

குறைந்த கட்டணத்தில் மதுரை, திருச்சி, கோவைக்கு இயங்கிய ஏர்இந்தியா விமானங்கள் ரத்து: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு எடிஆர் எனப்படும் 74 பேர் பயணம் செய்யக்கூடிய சிறியரக விமானங்களை இயக்கத்தொடங்கின. இந்த விமானங்கள் ஒவ்வொன்றும், 2 முறை சென்னையில் இருந்து அந்தந்த இடங்களுக்கு புறப்பட்டு சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பும். இதனால் நாளொன்றுக்கு 16 விமான சேவைகள் நடந்தன. பெரிய ரக விமானங்களைவிட இந்த விமானங்களில் கட்டணங்கள் குறைவு.  இந்த விமானம் சேவை தொடங்கிய 6 மாதங்களில், விசாகப்பட்டினத்துக்கான சேவை எந்தவித முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டன. மற்ற 3 நகரங்களுக்கும் விமான சேவை இருந்தது. இந்த விமான சேவை 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கும்போது, ஏர் இந்தியா அதிகாரிகள், ‘‘இந்த 4 நகரங்களுக்கும் மட்டும் இப்போது தொடங்கி இருக்கிறோம். படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு தூத்துக்குடி, சேலம் போன்ற இடங்களுக்கும் விரைவில் தொடங்கும்’’ என்று அறிவித்திருந்தனர். மாறாக விசாகப்பட்டினத்துக்கு இயங்கி கொண்டிருந்த சேவையை ரத்து செய்துள்ளனர்.

நேற்று காலையில் இருந்து சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களுக்கு இயங்கி கொண்டிருந்த 6 விமான சேவைகள் திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டன. இந்த 6 விமானங்கள், அந்தந்த நகரங்களுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வரும். அந்த வகையில் மொத்தம் 12 விமான சேவைகள் ரத்தாகியுள்ளது. குறைந்த கட்டணம் என்பதால் ஆர்வத்துடன் பயணித்து கொண்டிருந்த நடுத்தர வர்க்க பயணிகள், பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு முழுமையாக டிக்கெட் கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டு வருகிறது.இதுசம்பந்தமாக ஏர் இந்தியா அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நிர்வாகம் தற்போது சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதோடு விமானங்களில் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே பயணிகள் அதிகமாக பயணிக்காத வழித்தடங்களில் இயங்கி கொண்டிருக்கும் விமான சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி இந்த விமான சேவைகள் தற்காலிகமாக வரும் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்பின்பு, இந்த விமானத்தை இயக்குவது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும். மேலும் ரத்து செய்யப்பட்ட விமானங்களை பயணிகள் நெரிசல் அதிகமுடைய வழித்தடங்களில் இயக்க இருக்கிறோம். ஆனால் இந்த விமானங்களை சென்னையில் இருந்து இயக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில், சென்னையில் இருந்து இலங்கை யாழ்பாணத்துக்கு வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் எடிஆர் விமானம் வழக்கம் போல இயங்கும்’’ என்றார். இது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Trichy ,Coimbatore ,flights ,Air India ,Madurai , low rates, Air India ,cancels, flights , Madurai, Trichy ,Coimbatore
× RELATED பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில்...