×

தாங்க முடியாத தமிழக அரசின் நிதிச்சுமை குத்தகைக்கு விடப்படும் சாலைகள்

சிறப்பு செய்தி: தமிழக அரசின் நிதிச்சுமையை காரணம் காட்டி சாலைகள் மூலம் வருவாய் ஈட்ட புது திட்டம் ஒன்றை நெடுஞ்சாலைத்துறை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் நிலங்களை போன்று சாலைகளை தனியாருக்கு குத்தகை விட்டு வருவாய் ஈட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இது மத்திய பாஜவின் தனியார் மயத்தை ஒட்டி உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 59,405 கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் பெருகி வரும் போக்குவரத்துக்கு ஏற்ப அகலப்படுத்துவது, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது மற்றும் சாலை பராமரிப்பு பணி இந்த துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆண்டுக்கு ₹10 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த நிதி பெரும்பாலும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் மூலம் கடன் பெறப்பட்டு அதன் மூலம் சாலை பணிகள் நடக்கிறது. இதை தவிர்த்து பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் சாலை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகள் நடக்கிறது. இது போன்ற பணிகளுக்கு தொடர்ந்து செலவு செய்ய வேண்டி இருப்பதால் அரசுக்கு நிதிச்சுமை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

குறிப்பாக, ஒவ்வொரு கோட்ட சாலைகளில் 5 ஆண்டுகள் தனியாரிடம் கொடுத்து பராமரித்து வருகிறது. இந்த திட்டத்தாலும் அரசுக்கு செலவு தான் ஏற்படுகிறது. இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை போன்று தமிழக நெடுஞ்சாலைத்துறைகளிலும் சாலைகள் மூலம் வருவாய் ஈட்டும் புது திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன்படி, நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அதிக வாகன பயன்பாடு உள்ள சாலைகளை 10 ஆண்டுகளுக்கு தனியாருக்கு ஒப்பந்தம் விட்டு வருவாய் ஈட்டவிருக்கிறது. அதாவது, ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்தி விட வேண்டும். அதன்பிறகு அந்த நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு அந்த சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலித்து கொள்ளலாம் என்பது போன்று திட்டத்தை செயல்படுத்தப்படவிருக்கிறது. இந்த திட்டத்துக்கு டிஓபி என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக முக்கிய சாலைகளை ஒப்பந்தம் விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறும் போது, ‘தற்போது புதிதாக சாலை அமைத்து, அந்த சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் திட்ட பணிகளுக்கான நிதியை வசூலித்து தொடர்ந்து அந்த சாலைகளில் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது போன்று அல்லாமல் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலைகளை சுங்க கட்டணம் வசூலிக்க தனியாருக்கு ஒப்பந்தம் விட்டு அதன் மூலம் அரசு வருவாய் ஈட்டவிருக்கிறது. ஏற்கனவே, நிலங்களை குத்தகை விட்டு வருவாய் ஈட்டப்படுகிறது.

அது போன்று தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது’ என்றார். பாஜ எப்படி ஒவ்வொன்றாக தனியார் மயமாக்கி வருகிறதோ, அதே நடைமுறையை தமிழக அரசு பின்பற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, அரசின் தவறான நிர்வாகத்தால் கடன் சுமை அதிகரித்துள்ளது. அதை சரி செய்ய முயலாமல் தமிழக சாலைகளை குத்தகைக்கு விடுவது அபத்தமானது. இது பாஜவின் தனியார்மயமாக்கல் கொள்கை போன்றது. இதே நிலை நீடித்தால் வருவாய் பெருக்க ேவண்டும் என்பதற்காக தலைமை செயலகத்துக்கு உள்ளே செல்லும் பாதையை குத்தகைக்கு விட்டு இந்த அரசு வருவாய் பார்க்கும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று குற்றம்சாட்டினர்.

Tags : Roads ,Government of Tamil Nadu ,Government ,Tamil Nadu , financial burden, unbearable, Tamil Nadu Government, Leased roads
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...