×

கூட்டணி கட்சிகளின் மிரட்டலை சமாளிக்க அதிமுக அதிரடி வியூகம் மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் இல்லை

* நகராட்சி, பேரூராட்சி தலைவர்களையும் கவுன்சிலர்களே தேர்வு செய்வர் * தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய முதல்வர் எடப்பாடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டம் நடந்து முடிந்த 10வது நாளில் மீண்டும் நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.ஆனாலும் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்தும், அதற்கான முறையான அறிவிப்பு வெளியிடுவது குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தமிழக உள்ளாட்சி சட்டப்படி, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்களை தற்போது பொதுமக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் நடைமுறை உள்ளது.ஆனால், நேரடியாக பொதுமக்களே உள்ளாட்சி தலைவர்களை தேர்வு செய்தால், கூட்டணி கட்சிகளுக்கு மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளில் அதிக இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற அச்சம் அதிமுகவுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மூன்று அல்லது இரண்டு மேயர் சீட்டுகளை கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஒரு கூட்டணி கட்சிக்கு மேயர் சீட் கொடுத்து விட்டு மற்றொரு கட்சிக்கு கொடுக்காவிட்டால் அதிமுக தலைமைக்கு நெருக்கடி அதிகளவில் ஏற்படும்.இதை சமாளிக்க, நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் நடைமுறையை கொண்டு வருவதற்கான சட்டத்திருத்தம் செய்ய நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்தால், கவுன்சிலர்களே மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் நிலை வரும். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு மேயர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பதவியை கொடுக்காமல் சமாளித்து விடலாம் என்று அதிமுக கணக்கு போட்டுள்ளது என்றார்.

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னரின் அனுமதியின் பேரில் உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் செய்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்கள் குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சலுகைகள் குறித்தும் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

விரைவில் சட்ட திருத்தம்
தமிழகத்தில் தற்போதுள்ள 15 மாநகராட்சி, 121 நகராட்சி, 528 பேரூராட்சிகளுக்கு தனித்தனி தலைவர்களை பொதுமக்களே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இந்த பதவிகளுக்கு பொதுமக்கள் தனியாக தலைவர்களை தேர்வு செய்யும் நடைமுறையை ரத்து செய்து விட்டு, கவுன்சிலர்களே மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : election ,mayor ,coalition parties ,direct election ,Parties ,AIADMK ,Allied , AIADMK Action , Allied Parties, election ,mayor
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...