வாகன ஓட்டிகளை மிரட்டும் ஒற்றை கொம்பன் யானை: வனத்துறையினர் எச்சரிக்கை

உடுமலை: மூணாறு சாலையில் ஒற்றைக் கொம்பன் யானை வாகன ஓட்டுநர்களை மிரட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து எச்சரிக்கையுடன் செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் காமனூத்து பிரிவு பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றைக் கொம்பன் யானை ஒன்று நடமாடி வருகிறது. இந்த யானை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகிறது. இதனால் இந்த சாலையில் செல்வோர் பீதி அடைந்துள்ளனர். கேரள மாநிலம் மறையூர் பகுதியில் இருந்து தினசரி ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களிலும், ஜீப், வேன்களிலும் உடுமலைக்கு பொருட்கள் வாங்க வருகின்றனர். சாலையில் யானை நிற்பதால் இவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, ‘‘யானையை விரட்டினாலும் மீண்டும் சாலை பகுதிக்கு வந்துவிடுகிறது. எனவே, சின்னாறு மற்றும் அமராவதி செக்போஸ்ட்களை கடந்துவரும் வாகன ஓட்டிகளிடம் கவனத்துடன் செல்லும்படி அறிவுறுத்துகிறோம். இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தனியே செல்லாமல் பேருந்து அல்லது லாரியின் பின்னால் செல்லும்படி கூறியுள்ளோம். இடையூறு செய்யாமல் இருந்தால் தானாகவே யானை காட்டுக்குள் சென்றுவிடும்’’ என்றனர். இருப்பினும் யானையை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>