×

கைகளை கோர்த்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ரயில்முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோட்லாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் மாரி என்கிற மதன் (22). இவர் டூவீலர் ஒர்க்‌ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். தொரப்பாடி பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் மகள் சுவாதி என்கிற சுவேதா பண்ருட்டியில் தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். உறவினர்களான மதனும், சுவாதியும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். கல்லூரியில் இருந்து சுவாதி தாமதமாக வந்தால் மதன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து வீட்டில் விடுவது வழக்கம். நேற்று காலை சுவாதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டார். மதனும் ஒர்க்‌ஷாப்புக்கு வேலைக்கு சென்று விட்டார்.

மாலை 5 மணி அளவில் கல்லூரியில் இருந்து வெளியே வந்த சுவாதியை மதன் தனது பைக்கில் வெளியே அழைத்துச்சென்றுள்ளார். பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளதாக தெரிகிறது. சுவாதி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவர் பயிற்சிக்காக கல்லூரியை ஒட்டியுள்ள மருத்துவமனையிலேயே தங்கியிருக்கலாம் என அவரது பெற்றோர் கருதி அவரை தேடவில்லை. இதற்கிடையே சென்னையில் இருந்து வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு பண்ருட்டி அருகே கணிச்சப்பாக்கம் ரயில்வே கேட் அருகில் வந்தபோது மதனும், சுவாதியும் கைகளை கோர்த்துக்கொண்டு ரயில்முன் பாய்ந்தனர். ரயில் வேகமாக வந்ததால் இருவரும் ரயிலில் அடிபட்டு உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இன்ஜின் டிரைவர் காதல்ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு சென்று விட்டார்.

இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் இளம்பெண், வாலிபர் சடலங்களைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide , Train, love couple, suicide
× RELATED கொரோனா சிகிச்சை மையத்தில் இன்ஜினியர் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி