×

பப்ஜிக்கு போட்டியாக COD!

‘இந்த மிட்டாய் நசுக்கி விளையாடுற கேண்டி கிரஷ்லாம் அந்தக் காலம் மச்சி. இங்க பாரு நாலு பேரா இறங்கறோம்... சும்மா எதிரிகளை துவம்சம்
பண்றோம்...’’இப்படித்தான் இக்கால இளைஞர்கள் கேம்களை தேர்வு செய்கிறார்கள். இதில் PUBG வைரல் லெவலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, போட்டியாக களமிறங்கியுள்ளது ‘COD: Call Of Duty’.

PUBG (Player Unknown’s Battlegrounds)யில் ஏற்கனவே நீங்கள் புரோ வீரர் எனில் COD உங்களுக்கு தண்ணிபட்ட பாடு. அதே ஸ்டைல் மேப், துப்பாக்கிகள், நான்கு மல்டி பிளேயர்களுடன் விளையாட்டு என இருக்கும்.எனில் PUBGயை விட இதில் என்ன சிறப்பு? அட COD வெளியானதே சிறப்புதான் என்பார்கள் 90களின் முடிவிலும், 2000ன் துவக்கத்திலும் சிறுவர்களாக இருந்தவர்கள்!

GTA: Grand Theft Auto- வீடியோ கேமுக்கு நிகராக அதிகம் விளையாடப்பட்ட கணினி கேம். பிரவுசிங் சென்டர்கள் முதல் கேம் சென்டர்கள் வரை களை கட்டிய விளையாட்டு தற்சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS வடிவமாக மொபைல்களில் களமிறங்கியுள்ளது.

முதல் நபர் பார்வையில் (FPP: First Person Perspective) விளையாடுவதை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இந்த கேமை மூன்றாம் நபர் பார்வையிலும் விளையாட்டின் நடுவிலேயே மாற்றிக்கொள்ளலாம். இந்த ஆப்ஷன் PUBGயில் கிடையாது.

அதேபோல் PUBGயில் FPP-TPP என இரண்டும் தனித் தனி ரிவார்ட் டயர்களாகவும், வெற்றிகளாகவும் கணக்கிடப்படும். CODயில் எப்படி விளையாடினாலும் ஒரே ரிவார்ட்தான், விருதுதான். PUBGயில் மிகப்பெரிய சங்கடம் புது கேமர்களுக்கு வெறும் உள்ளாடைகள் மட்டுமே கொடுக்கப்படும். லெவல்கள் ஒவ்வொன்றாக கடக்கும் போதுதான் சட்டை, பேண்ட், மாஸ்க்குகள் என ரிவார்டாக வரும். BP காயின்களைக் கொண்டுதான் வாங்க வேண்டும்.

ஆனால், CODயில் களமிறங்கும்போதே கமாண்டோவாக இறங்கலாம்! CODயின் ஆட்டோ ஃபயர் ஆப்ஷன் அறிமுக பிளேயர்களுக்கு வரப்பிரசாதம். அடுத்த முக்கிய அம்சம் ‘TDM : Team Death Match’.

COD-யில் அதுவும் பெரிய மேப் அல்லது கப்பல், வீதிகள் போன்ற விதவிதமான இடங்களில் நடைபெறும். ஆனால், PUBGயில் TDM மேட்ச்கள் எப்போதும் ஒரே இடத்தில்தான். எல்லாவற்றிற்கும் மேல் PUBGயின் சைஸ் 2.9GB. ஆனால், CODயின் சைஸ் 1.1GB மட்டுமே! இதில் ஆட்டோ பிக்அப் ஆயுதங்களுக்கான ஆப்ஷன்களும் சீராக உள்ளன.

‘ஹானர் ஆஃப் கிங்ஸ்’, ‘அரேனா ஆஃப் வேலர்’ போன்ற பத்துக்கும் மேற்பட்ட கேம்களை உருவாக்கிய டிமி ஸ்டூடியோவும் (TiMi Studio) ஐம்பதுக்கும் மேற்பட்ட டாப் உலக வீடியோ கேம்களை உருவாக்கிய ஆக்டிவிஷன் (Activision) குழுவும் இணைந்து இந்த COD கேமை வெளியிட்டுள்ளனர்.

2003ல் கணினி விளையாட்டாக இருந்த COD இந்த வருடம் 2019, அக்டோபர் 1ம் தேதி மொபைல் வெர்ஷனாக வெளியானது. வெளியாகி வெறும் இரண்டு வாரங்களில் மில்லியன்களில் டவுன்லோடு செய்யப்பட்டு விளையாடப்பட்ட மொபைல் கேம்களில் டாப் இடம் பிடித்துவிட்டது.

‘நாங்கள்லாம் COD கமாண்டோக்கள்’ என ஒரு குழு அந்தப் பக்கம் படையெடுக்க இன்னமும் பலரும் விரும்புவது என்னவோ PUBGதான்.
காரணம், தெளிவான கிராபிக்ஸ். PUBGயில் ஆண், பெண் என்னும் வித்யாசங்களுடன் கேரக்டர்கள் இருக்கும்.

மேலும் குரல்களிலும் கூட வித்யாசங்கள் இருக்கும். கிரேட்களில் கொடுக்கப்படும் உடைகள், ஆக்ஸசரிஸ்களில் கூட அந்த வித்யாசங்களைக் காணலாம். அதேபோல் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், தீபாவளி, ஹாலோவீன் என பண்டிகைகளை மையமாகக் கொண்ட டாஸ்க்குகள் அதிகம்.

மிகச் சிறந்த சிறப்பம்சம் RP டாஸ்க்குகள். வெறுமனே RP டாஸ்க்குகளுக்காக பணம் கட்டி விளையாடும் நபர்கள் கூட உள்ளனர். பெரிய மேப்கள், ஒவ்வொரு மேட்ச்களும் குறைந்தது 30 நிமிடங்கள். வீடுகள், வண்டிகள் என அத்தனையிலும் தெளிவான விஷுவல்கள்.

ஆரோக்கிய அம்சமாக PUBGயை நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரங்களுக்குப் பிறகு விளையாட முடியாது. ஆறு மணி நேரங்கள் முடிந்துவிட்டால் அன்றைய தினத்திற்கான கோட்டா ஓவர். கேமே நாம் விளையாடுவதை லாக் செய்துவிடும். மீண்டும் அடுத்த நாள்தான் விளையாட முடியும்.

PUBGயில் இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கக்  காரணம் அன்ரியல் இன்ஜின் (Unreal Engine). அன்ரியல் இன்ஜின்களில் C++ பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொன்றையும் கிரியேட்டரே உருவாக்க வேண்டும். JAVA ஸ்கிரிப்ட்டை விட C++ கொஞ்சம் கடினம். அதேபோல் COD, யுனிட்டி (Unity Engine) இன்ஜின்களில் உருவாக்கப்பட்டவை. இதில் டெக்ஸ்சர்கள், ஒலிகள், மேப்கள் என ஸ்டோர்களில் இருந்தே பெறலாம்.

CODயில் ஒரே மாதிரியான நிறங்களில் பிளேயர்களின் உடைகள், மேப்கள், பெட்டிகள் இருப்பதன் காரணம் இதுவே. சுலபமான கேம் உருவாக்கம்.
நண்பர்களுடன் பேசி விளையாடும் ஆப்ஷன் இரண்டிலுமே இருப்பதால் சிலர் இரண்டு கேம்களையும் விளையாடுகிறார்கள்.

இரண்டு கேம்களையுமேவெளியிட்டிருப்பது கேம் மான்ஸ்டராகவும், இணைய உலக நவீன தொழில்நுட்ப பிதாக்களில் ஒரு நிறுவனமாகவும் கருதப்படும் Tenscentதான்.அவர்கள் அளவில் இப்போது பில்லியன்களில் வருமானம் ஈட்டுகிறார்கள்.

ஷாலினி நியூட்டன்


Tags : pub , PUBGY, COMPETITION, COD
× RELATED போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை 3 போலீசார் சஸ்பெண்ட் புதுகை எஸ்பி அதிரடி