×

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தொடரும் திருட்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல்

நாகர்கோவில் :  நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 30 க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களும், வாராந்திர சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த ரயில் நிலையத்தில், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்ற பிரச்சினை ஒருபுறம் இருக்க தற்போது, பயணிகளுக்கும், பயணிகளின் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.


சமீப காலமாக ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலைய சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகமாக நடக்க தொடங்கி உள்ளன. ரயில் நிலைய பிளாட்பாரங்களில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் உடமைகள் மற்றும் செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. இதே போல் ரயில் நிலைய சுற்று வட்டார பகுதியில் நடந்து செல்பவர்களை மிரட்டி பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டு உள்ளன.
நகைகள் மற்றும் பொருட்களை  பறி கொடுப்பவர்கள், நாகர்கோவில் ரயில் நிலைய முதல் பிளாட்பாரத்தில் உள்ள ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்கிறார்கள்.


ஆனால் சரிவர வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது. ரயில் நிலையத்துக்கு வெளியே நடக்கும் சம்பவங்களுக்கு, கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். வெளியூர்காரர்கள் கோட்டார் காவல் நிலையத்தை கண்டுபிடிப்பதே சிரமம் என நினைத்து, புகார் எதுவும் அளிக்காமல் சென்று விடுகிறார்கள். இதன் காரணமாக திருட்டு கும்பல், வழிப்பறி கும்பல் மிகவும் சுதந்திரமாக உலா வருகிறார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, ரயில்வே குடியிருப்பு வழியாக ஊட்டுவாழ்மடத்துக்கு நடந்து வந்து கொண்டு இருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை இரு வாலிபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது பற்றி கோட்டார் காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும் என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை சம்பந்தப்பட்ட நபர் புகார் அளிக்க வில்லை என காவல் துறையினர் கூறி உள்ளனர். ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் நடக்கும் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க ரயில்வே போலீசாரும், சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் இணைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே போலீசாரை பொறுத்தவரை தற்போது போதிய அளவு போலீசார் இல்லை. கண்காணிப்பு கேமராக்களும் இல்லை.

நாகர்கோவில் ரயில் நிலைய எல்கை என்பது, களியக்காவிளையில் தொடங்கி, நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் முடிவடைகிறது. இந்த பகுதிகளை கண்காணிக்க எப்படி முடியும்? என ரயில்வே போலீசார் கூறி உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார், குற்ற வழக்குகளில் உடனடியாக புகார்கள் வருவதில்லை. சம்பவம் நடந்து 2, 3 நாட்கள் கழித்து தபால் மூலம் புகார் அளிக்கிறார்கள். இதில் எப்படி விசாரணை நடத்த முடியும். ரயில்வே போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி விட்டு, சம்பவம் பற்றி தகவல் தெரிவித்தாலே குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும் என்றனர். தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களால் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சப்படுகிறார்கள். எனவே இதை தடுக்க காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மூடை, மூடையாக கடத்தப்படும் ரேஷன் அரிசி

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் திருவனந்தபுரம் நோக்கி செல்லும் ரயில்கள் கடத்தலுக்காக மட்டுமே பயன்படுகிறது. மூடை, மூடையாக ரேஷன் அரிசி கேரளாவுக்கு ரயில்களில் கொண்டு செல்கிறார்கள். 2, 3 நாட்களுக்கு ஒருமுறை வருவாய்த்துறை பறக்கும் படையினர் சுமார் 1500கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்கிறார்கள். இதில் 10 மூடைகள், 15 மூடைகள் வரை இருக்கின்றன.


இவற்றை எப்படி ரயில்களில் ஏற்றினார்கள். ஏற்றியவர் யார்? என்பதெல்லாம் தெரியாது. ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே ஊழியர்கள் எப்படி இவ்வளவு மூடைகளை ஏற்றுபவரை பிடிக்காமல் உள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி ரேஷன் அரிசி மூடைகளை மொத்தமாக கொண்டு வந்து கடத்தி செல்லும் நபர்களை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : perpetrators ,theft ,railway station ,Nagercoil ,Nagarcoil Railway Station , Nagarcoil ,Nagarcoil Railway Station,CCTV ,ongoing thef
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...