×

நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கீழ்பாக்கத்தை சேர்ந்த ஆடிட்டர் வந்தனா ஷக்காரியா தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், “சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.50 கோடி செலவில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை சரியாக பராமரிக்கவில்லை. மாநகராட்சி நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தபட்டுள்ளதாலும், மின்சார பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாலும் பாதசாரிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நடைபாதைகளில் கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வீடு இல்லாத பலர் நடைபாதைகளிலேயே இரவு தூங்குகிறார்கள். எனவே, சென்னை மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை பராமரிக்குமாறும் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள், மின்சார பெட்டிகள், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்துமாறும் மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர், உயர் நீதிமன்றம் எதிரே உள்ள என்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

கடந்த 14-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில்  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடைபாதைகளில் உள்ள வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன. கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற எதிரே அமைக்கப்பட்டுள்ள கோயில் நடைபாதையில் உள்ளதை அந்த கோயிலுக்கு மின்சாரம் எங்கிருந்து தரப்படுகிறது? அதன் அருகில் உள்ள ஜூஸ் கடைக்கு மின்சாரம் எப்படி கிடைக்கிறது? என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.

மேலும், நடைபாதையில் கடைகளை வைக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல முறை உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. அவற்றை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை என்று கூறி இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணை இன்று தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், இன்று வழக்கு விசாணையின்போது, நடைபாதைகளை வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. சென்னை மாநகர் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த போக்குவரத்து போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடைபாதை வியாபாரிகள் கணக்கெடுப்பு குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : removal ,Madras Corporation Immediate ,High Court , Pavement, Vehicles, Madras Corporation, High Court
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...