×

ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை பட்டியல் சாதிகள் நலத்துறை என மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: அரசு அலுவலக பதிவுகளில் ஆதிதிராவிட நலத்துறை என்று இருப்பதை பட்டியல் சாதிகள் நலத்துறை என்று அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:இந்திய அரசியலமைப்பு சரத்து 17ல் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பல்வேறு நிலைகளில் தீண்டாமை உள்ளது. தமிழகத்தில் 76 வகுப்பினர் பட்டியல் இனத்தவர்கள் என்று வரையறைக்குள் கொண்டுவரப்பட்டு அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த 76 வகுப்பினர் பட்டியலில் 2வதாக ஆதிதிராவிடர் பிரிவும் உள்ளது. 76 இனங்களில் ஒரு இனமாக உள்ள ஆதிதிராவிடர் என்ற பிரிவை ஒட்டுமொத்த பிரிவுக்கும் பொதுவாக வைத்து துறை உருவாக்கப்பட்டுள்ளது.  

 நாடு முழுவதும் உள்ள பட்டியலின மக்களுக்கு அந்தந்த மாநிலங்களில் பெயர் வைப்பது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு கடந்த 1981ல் கடிதம் எழுதியது. தமிழகத்தில் இந்த துறையை ஆதிதிராவிடர் நலத்துறை என்று அழைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2010 ஏப்ரல் 26ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என்று மாற்ற வேண்டும் என்று உறுப்பினர்கள் பேசியுள்ளனர். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரை பட்டியல் சாதிகள் நலத்துறை என்று மாற்றுமாறு உத்தரவிட வேண்டும். ஆதிதிராவிடர் என்று அழைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், இதே கோரிக்கையுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி அரசு ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்து முடிவு எடுத்துள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் வக்கீல் விஜயேந்திரனிடம் பொதுவாக இந்தி மொழியில் ஆதிதிராவிடர் என்ற பெயரை எப்படி அழைக்கிறார்கள் என்று தெரியுமா என்று கேட்டார்.

அதற்கு விஜயேந்திரன், ‘ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரில் மொழி பெயர்த்துள்ளனர். மத்திய அரசின் பதிவுகளில் பட்டியலினம் என்றுதான் உள்ளது’ என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு என்ன முடிவை எடுத்துள்ளது என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மனுதாரர் பெறலாம் என்று அறிவுறுத்தி விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : hearing ,Adivasi Welfare Department ,High Court ,Adivasi ,probe , Aboriginal Welfare, Caste Welfare, High Court
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...