×

ஐஎன்எக்ஸ் வழக்கில் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் அப்பீல்

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் கடந்த 2007ல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெற லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2017 மே 15ல் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ல் சிபிஐ ப.சிதம்பரத்தை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. தொடர்ந்து இதே வழக்கில் அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை கடந்த அக்டோபர் 16ல் கைது செய்தது.இந்த நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 22ல் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால்  அமலாக்கத்துறை விசாரணையில் இருந்ததால் அவரால் ஜாமீனில் விடுதலையாக முடியவில்லை.
இதையடுத்து தன் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் கபில்சிபல் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கு கடந்த 15ம் தேதி நீதிபதி சுரேஷ் கெய்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதற்கு முக்கிய ஆதாரம் உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிதம்பரம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்றார். அப்போது அவரிடம் சிதம்பரம் சார்பில் ஆஜரான கபில்சிபல் 90 நாட்களாக சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார். இதையடுத்து ஓரிருநாளில் இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இந்த நிலையில் சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான  உத்தரவில் இடம்பெற்றுள்ள தவறை திருத்தக்கோரி அமலாக்கத்துறை முறையீடு ெசய்துள்ளது. அதில் நீதிபதி சுரேஷ கெய்த் வழங்கிய உத்தரவில் பணமோசடி வழக்கில் டெல்லி வக்கீல் தாண்டனுக்கு வழங்கிய தீர்ப்பு தொடர்பில்லாமல் சுட்டி காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Chidambaram , P. Chidambaram appeals, bail , INX case
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...