×

பிஎஸ்என்எல்-லை தொடர்ந்து ரயில்வேயில் அறிமுகமாகிறது விஆர்எஸ்

சென்னை: ரயில்வே  தனியார்மயமாக உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக,  பிஎஸ்என்எல் நிறுவனம் போல் ரயில்வேயிலும்   விருப்ப ஓய்வு திட்டத்தை  அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உலகில்  2வது பெரிய ரயில்வே நிறுவனமான இந்தியன் ரயில்வேயில் 13.09 லட்சம் பேர்  வேலை செய்கின்றனர்.  நாடு முழுவதும் 68 ஆயிரத்து 442கிமீ நீளத்திற்கு ரயில்  பாதை அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் தரும் சரக்கு போக்குவரத்துக்காக 2.79  லட்சம் சரக்கு பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. பயணிகள் வசதிக்காக 65,326  பெட்டிகள் பயன்படுத்துகின்றனர். ஆண்டுக்கு 828 கோடியே 60 லட்சம் பேர்  பயணிக்கிறார்களாம். ரயில் பயணத்தை பாதுகாப்பு, கட்டணம் குறைவு ேபான்ற காரணங்களால்  எளிய, நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

ஏசி  வகுப்புகளில், சொகுசு ரயில்களில் விமான கட்டணத்துக்கு நிகரான கட்டணம்  வசூலிக்கப்படுகிறது.  ‘எங்கும் விளம்பரம்’ என்பதன் மூலம் கிடைக்கும்  வருவாய் தனி. ரயில்வே 2009ம் ஆண்டு வரை லாபத்தில் இயங்குவதாக  சொல்லப்பட்டது. ஆனால் அப்போதும் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது.  கடந்த 10, 20 ஆண்டுகளாக ரயில்வேயில் கடைநிலை,  துப்புரவு பணிகள் எல்லாம் தனியார் கைக்கு சென்று விட்டன. சென்னை ஐசிஎப்  உள்ளிட்ட ரயில்வே தொழிற்சாலைகளிலும் ஒப்பந்த, தனியார் ஊழியர்களின்  எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகின்றன. அதனால் ரயில்வேயை தனியார் மயமாக்கப் போவதாக கூறி அடிக்கடி தொழிற்சங்கங்கள் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தன.
அதை உறுதிபடுத்தும் வகையில் தனியார் ரயில் சேவைகளை  அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் ரயில்வேயை  தனியார் மயமாக்கும் யோசனை இல்லை என்று மத்திய அரசு சொல்லி வருகிறது.

ஆனால்  தனியார் மயமாக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக ரயில்வேயில் ஆட்களின்  எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் ரயில்வே இறங்கியுள்ளது. பிஎஸ்என்எல்லை  தொடர்ந்து ரயில்வேயிலும் விரைவில்  விருப்ப ஓய்வு திட்டத்தை(விஆர்எஸ்)  அறிமுகப்படுத்த உள்ளனர். அதற்காக  ரயில்வேயில் எத்தனை பேருக்கு விஆர்எஸ் கொடுக்கலாம் என்ற கணக்குப் பட்டியலை  எடுக்க தொடங்கியுள்ளது.  அதற்கான உத்தரவு அந்தந்த மண்டல ரயில்வே தனி  அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி  55 வயதை கடந்தவர்கள் அல்லது 30  ஆண்டுகள் பணியாற்றிவர்களின் பட்டியல் எடுக்கும் பணி இம்மாத இறுதிக்குள்  முடிக்க வேண்டுமாம். சில மண்டலங்களில் விடுமுறை நாட்களான நவ.16, 17  தேதிகளில் சிறப்பு பணியாக இந்த பட்டியல் எடுக்கும் வேலையை செய்துள்ளனர்.  அதனால் பிஎஸ்என்எல் போல் விரைவில் ரயில்வேயிலும் விஆர்எஸ் திட்டம் அமலாகும்  என்பதே ரயில்வே ஊழியர்களிடம் பரபரப்பான பேச்சாக உள்ளது.

இருப்பவர்களுக்கும் வேட்டு
விருப்ப  ஓய்வு திட்டத்தில் செல்லாதவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. ரயில்வே  ஊழியர்களை, பணியாளர்களை பணியில் தொடர வைக்கலாமா, விஆர்எஸ்சில் அனுப்பலாமா  என்பது அந்தந்தத் துறையின் மேல்அதிகாரியின் விருப்பத்தை பொறுத்தது. மேல் அதிகாரி   அறிக்கையின் அடிப்படையில் என்பதை விட அவர்களின் தனிப்பட்ட விருப்பு  வெறுப்பு அடிப்படையில்தான்  தான் ஊழியர்கள், பணியாளர்கள் வேலையில் தொடர  முடியும்.  தொழிற்சங்கங்கள் வலுவிழந்து இருக்கும் நிலையில் இந்த  ‘அதிகாரிகள் ஆய்வு முறை’  ஊழியர்களை அடிமைகளாக்கும்  நிலையை ஏற்படுத்தும்  என்று ரயில்வே ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags : VRS ,BSNL ,BSNL-Lie VRS Introduces Railways , BSNL, Railways, VRS
× RELATED தெற்கு ரயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில்...