×

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சிஎம்டிஏ விதிமுறை மீறியதால் வாலிபர் பலி: நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு

சென்னை: ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சிஎம்டிஏ விதிமுறை மீறியதால் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார் என்ற தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது. சிஎம்டிஏ அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டாலும், போலீசார் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளது. 17 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் அடுக்குமாடி வர்த்தக வளாகம் கட்டப்பட்டுள்ளது. அங்கு 8 தியேட்டர்களும் உள்ளன. ஒரு நாளைக்கு பல்லாயிரம் பேர் அங்கு வந்து செல்கின்றனர். இந்த வர்த்தக வளாகம் கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ), தீயணைப்புத்துறை, சென்னை மாநகராட்சி, போக்குவரத்து போலீஸ் ஆகியோரின் அனுமதியை வாங்க வேண்டும். இந்த வளாகத்திற்கு முறைப்படி அனுமதி வாங்கியுள்ளனர்.

அப்படி அனுமதி வாங்கும்போது, பெரிய வர்த்தக வளாகம் என்பதால், கழிவு நீர் மற்றும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது ஆட்களை வைத்து சுத்தம் செய்யக்கூடாது. கருவிகளை வைத்துத்தான் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கான கருவிகள் அனைத்தும் வைத்திருக்க வேண்டும் என்று விதிமுறைகளை சிஎம்டிஏ விதித்தது. கருவிகள் உள்ளதா என்று சிஎம்டிஏ அதிகாரிகள் வந்து சோதித்து பார்த்த பிறகுதான் அனுமதி வழங்கியுள்ளனர். இந்தநிலையில், கடந்த 12ம் தேதி, எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள கழிவுநீர் தொட்டியில், ஐஸ்அவுஸ் அனுமந்தபுரம் முதல் தெருவை சேர்ந்த அருண்குமார்(25), தம்பி ரஞ்சித்குமார்(23) உள்ளிட்ட 5 பேர் சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். வணிக வளாகத்தில் உள்ள தரைத்தளத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் ரஞ்சித்குமார் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென தொட்டியில் விஷவாயு தாக்கியது. ரஞ்சித் குமார் மயங்கி விழுந்தார். மேலே நின்றிருந்த அவரது அண்ணன் அருன்குமார், தனது தம்பியை காப்பாற்ற முயற்சி செய்தார். தம்பி காப்பாற்றப்பட்டார். ஆனால், விஷவாயு தாக்கியதில் அண்ணன் அருண்குமார் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து, அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சிஎம்டிஏ விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும், அந்த துறையின் உயர் அதிகாரி ஒருவர், அந்த நிறுவனத்துடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன் பலனாக பெரிய தொகை வரை உயர் அதிகாரிக்கு கை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய சிஎம்டிஏ அதிகாரிகள் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. நோட்டீஸ் கூட வழங்கவில்லை. ஆனால், அண்ணாசாலை போலீசார், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னையில் இதேபோல பல வர்த்தக வளாகங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Violator ,Express Avenue ,CMA ,violation ,Royapettah ,killing ,men , Chennai Royapettah, Expressway Avenue, CMDA Regulation, Plaintiff
× RELATED 15 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற...