×

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவுகள் அகற்றம்: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாகனங்களை மீட்பதில் சிக்கல்

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது மண்சரிவு, வீடுகள் இடிதல், மரம் விழுதல் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. நீலகிரியில் இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16ம் தேதி துவங்கியது. துவக்கம் முதலே கனமழை கொட்டிய நிலையில் குன்னூரில் பலத்த சேதம் ஏற்பட்டது. மலை ரயில் பாதை, குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. சரிவான பகுதிகளில் குடியிருப்புகளை ஒட்டி மண்சாிவுகள் ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கின.

இந்நிலையில் நேற்று அதிகாலை குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் மழை குறைவாக இருந்த நிலையில், குன்னூரில் அதிகாலை துவங்கி சுமார் 3 நேரத்திற்கும் மேல் பெய்தது. குன்னூரில் மட்டும் 139 மி.மீ., மழை கொட்டியது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் முதல் பர்லியார் வரை காந்திபுரம், காட்டேரி, கேஎன்ஆர்., மரப்பாலம் உட்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டும், மண்சாிவும் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. காட்டேரி அருகே சாலையில் பிளவு ஏற்பட்டதால் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊட்டியில் இருந்து மேட்டுபாளையம் செல்லும் வாகனங்கள், மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டி வர கூடிய அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. பின்னர் தொடர்ந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு மண் சரிவுகளை அகற்றினர். இதையடுத்து, நேற்று மாலை முதல் போக்குவரத்து சீரானது. இதற்கிடையில் காட்டேரியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கரும்பாலம் உள்ளிட்ட 3 இடங்களில் ஏற்பட்டிருந்த மண்சரிவுகளும் ஜேசிபி உதவியுடன் அகற்றப்பட்டன.

குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஓடையில் நேற்று ஓடிய வெள்ள நீரில் சாலையோரம் நிறுத்தியிருந்த ஆட்டோ, பிக்கப் ஜீப், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள்‌ என 20க்கும் மேற்பட்டவை ஓடையில் அடித்து செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் கனரக வாகனங்கள் உதவியுடன் 3 வாகனங்களை மட்டுமே மீட்டனர். வெள்ள நீர் அதிகளவில் ஓடுவதால் வாகனங்கள் எங்கு கிடக்கின்றன என்பது தெரியாததால் மீதமுள்ள வாகனங்களை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது.

Tags : road Disposal ,Coonoor - Mettupalayam ,road , Coonoor - Mettupalayam, Soil Slope
× RELATED நீலகிரி அதிமுக அலுவலகம், வேட்பாளர் காரில் சோதனை