×

எங்க இனத்திலிருந்துதான் நீங்களும் வந்தீங்க சாமியோவ்....குவார்டர் அடித்து விட்டு கும்மாளமிடும் குரங்கு

நெல்லை: குரங்காடி வித்தைகாட்டி வரும் குரங்கு அவரைப்போல் தினமும் ஒரு குவார்டர் மதுவை உள்ளே தள்ளிவிட்டு கும்மாளமிடுவது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. அந்த ருசிகர செய்திதான் இங்கே தரப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு தினமும் காலை, மாலை என பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இதில் வேலைக்கு செல்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பயணம் செய்வார்கள். இதுபோல் குரங்காட்டி ஒருவரும் அடிக்கடி இந்த ரயிலில் வருவார். அவர் கையில் நன்றாக கொழுத்து வளர்ந்த 3 வயது ஆன ஆண் குரங்கை அழைத்து வருவார். ரயிலில் பயணம் செய்பவர்களிடம் குரங்கு அன்பாக சேட்டை செய்யும், நாம் முறைத்துபார்த்தால் அதுவும் முறைக்கும். என்ன சாமியோவ்..அப்படி பார்க்கிறீக..எங்க இனத்தில் இருந்துதான் நீங்களும் வந்தீக..என அந்த குரங்கு நம்பை பார்த்து சொல்லாமல் சொல்லி காட்டும். அடிக்கடி குரங்கை பயணிகள் பார்ப்பதும், அதை சீண்டி பார்க்கவும் தவறமாட்டார்கள். அந்த குரங்காட்டி யார், எப்படி இந்த தொழிலுக்கு வந்தார்? என பயணிகள் சிலர் அவரது வாயை நோண்டினார். அப்போது அவர் தனது குரங்கு பற்றி சொன்ன கதை சற்று வித்தியாசமாக இருந்ததால், அவரை பயணிகள் சூழ்ந்து கொண்டு ருசிகர கதையை கேட்க தயாரானார்கள்.

சாமியோவ் நமக்கு ஆறுமுகநேரி பகுதிதாங்க சொந்த ஊர், ரொம்ப வருஷமா இந்த தொழில் உள்ளேன். நான் வளர்க்கும் குரங்கும் எனக்கு ஒரு செல்லப்பிள்ளைதான். அவனை விட்டு என்னால் பிரியமுடியாது. அவனும் என்னை விட்டு பிரியமாட்டான். நான் ஊர் ஊராக சென்று வித்தை காட்டி பிழைத்து வருகிறேன். எனக்கு குடிப்பழக்கம் உண்டு. கிடைக்கும் வருமானத்தை பொறுத்து குவார்ட்டரோ, அதற்கும் மேலோ குடிப்பது வழக்கம். நான் குடிப்பதை என்னோடு குரங்கும் பார்த்துக்கொண்டே இருக்கும். இப்படித்தான் ஒருநாள் குடித்து விட்டு பாட்டிலில் மீதி வைத்திருந்த மதுவை குடித்து விட்டது. அதன் ருசி..அதற்கு பிடித்து விட்டதோ என்னவே...தினமும் நான் குடிக்கும்போது அதை பிடிங்கி குடிக்க ஆரம்பித்தது. நான் பிடுங்கி பார்த்தும் முடியவில்லை. அதனால் வேறு வழியின்றி தினமும் நான் குடிக்கும்போது, அதற்கும் ஒரு குவார்டர் வாங்கி கொடுப்பேன். அது தண்ணீர் எதுவும் கலக்காமல் ராவாக அப்படியே ஒரு நொடியில் குடித்து விட்டு பாட்டிலை தூக்கி எறிந்து விடும். அதன் பிறகு கேட்கவேண்டாம். அதன் போதையில் நன்றாக வித்தை காட்டி குத்தாட்டம் போடுவான். நான் சொன்னபடி எல்லாம் செய்வான்.. அவனுடைய செய்கை எனக்கும் பிடித்து போகவே.. நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது ஒரு பாட்டில் குடிக்க வைத்துதான் கூட்டிச்செல்வேன். இப்படி ரொம்ப வருஷமா நடக்குங்க சாமி.... ஒரு நாள் வாங்கி கொடுக்கவிட்டால் சும்மா விடமாட்டான் என்னை பிறாண்டி எடுத்து விடுவான்.

இப்படித்தான் ஒருநாள் குரும்பூரில் வித்தைக்காட்டி கொண்டிருந்தேன். அப்போது பேன்ட் சர்ட் அணிந்த இருந்த இருவர் வந்தனர். அவர்கள் பார்க்க போலீஸ்காரர்கள் மாதிரி தெரிந்தது. குரங்கின் வித்தையை ரசித்துக்கொண்டிருந்த அவர்கள்.
என்னை அழைத்து, ஏம்பா..குரங்கை வைத்து வித்தைகாட்டுவது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தப்பு என்பது உனக்கு தெரியுமா? நாங்கள் வனத்துறையினர். உனது குரங்கை பிடித்து காட்டில் கொண்டுபோய் விட்டு விடுவோம் என்ற மிரட்டினர். சாமியோவ்...நீங்கள நல்லா இருக்கணும்.. இந்த குரங்கு என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரியாதுங்கோ...அதனால் குடிக்காமல் இருக்கவும் முடியாது என்று அவர்களிடம் கெஞ்சினேன். அதற்கு அவர்கள், உன் குரங்கு குடிப்பதாய் சொல்கிறார். அது குடித்து விட்டால் குரங்ைகை விட்டு விடுகிறோம்..இல்லாவிட்டால் குரங்கை பிடித்து சென்றுவிடுவோம் என்றனர்.

நீங்கள் வாங்கி குடுங்க சாமி...அதற்கு பிறகு என்ன நடக்குன்னு பாருங்க..என்று நானும் கூறினேன். உடனே அவர்கள் அங்குள்ள டாஸ்மாக்கிற்கு சென்று இரண்டு குவார்ட்டர் பாட்டில் வாங்கி வந்தனர். ஒன்று உனக்கு..மற்றொன்னு உன் குரங்கிற்கு என கொடுத்தனர். நானும் மூடியை உடைத்து அதனிடம் நீட்டினேன். அதை வாங்கி என் செல்லப்பிள்ளை..மடக்..மடக் என்று குடித்து விட்டான். இதை பார்த்த வனத்துறையினர்..ஆச்சரியப்பட்டு, இப்போது நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்..உன் குரங்கை நாங்கள் பிடித்து போனாலும் அது கண்டிப்பாக காட்டில் நிற்காது என கூறிவிட்டு சென்றனர். இப்படி நான் வளர்க்கும் இந்த பாசக்கார குரங்கால் அது பிழைப்பும், என்னோட பிழைப்பும் போய்க்கொண்டிருக்கிறது என அவர் தனது கதை கூறி முடித்தார். அதற்குள் அவர் இறங்கும் இடம் வந்ததும் இறங்கினார். அந்த குரங்கும் பயணிகளுக்கு டாட்டா காட்டி விட்டு பிரியாவிடை பெற்று சென்றது. மனிதன்தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி போய்விட்டான் என நினைத்தோம். ஆனால் விலங்குகளும் மதுவின் ருசியை நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன என்பது  இந்த குரங்காட்டியின் குரங்கு சாட்சியாகும்.

Tags : Paddy, Monkey, River
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை