×

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, நிலங்களை விற்கும் அரசாணை கோயில்களுக்கு எப்படி பயனளிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா


அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்


இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இதற்கு முந்தைய விசாரணையில் கோயிலுக்கு தேவைப்படாத நிலத்தை ஏழைகளுக்கு வழங்குவது குறித்தும் கோயிலுக்கு தேவைப்படாத நிலத்துக்கு உரிய பணத்தை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக  உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து இவ்வழக்கை நவம்பர் 2ம் வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அரசாணையை அமல்படுத்த முடியாது

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிலங்களில் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விவரம் தெரியாமல்  பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் அறநிலையத்துறை அதிகாரிகள் அரசின் ஊதுகுழலாகவும், பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், அரசாணை ஒரு மதத்திற்கான வழிபாட்டுதலங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ? பிற மத தலங்களுக்கு கிடையாதா ?அரசாணை மூலம் கோயில் நிலங்களை விற்க அறநிலையத்துறையை அரசு வற்புறுத்துகிறதா ? என்றும் கேள்வி எழுப்பியது.இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Pattaya ,Madras High Court ,temple lands ,government ,barracks ,Karnataka , High Court, Patta, Govt, Temple lands
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...