×

புளியங்குடி, கடையம் பகுதியில் தொடரும் அவலம் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுடுகாட்டுக்கு சுமந்து செல்லும் மக்கள்

புளியங்குடி :  புளியங்குடி, கடையம் பகுதிகளில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை அடைபட்டுள்ளதால் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சடலத்தை  மக்கள் சுமந்து செல்லும் அவலம் தொடர்கிறது.  வடகிழக்குப் பருவ மழை தீவிரத்தால் நெல்லை மாவட்டம் புளியங்குடி அடுத்த இலந்தகுளம், நாராயணபேரி  குளங்களில் நிரம்பிய தண்ணீர் மறுகால் வழியாக சமுத்திரம் என்ற குளத்திற்கு செல்கிறது. பொது பிரிவினருக்கான சுடுகாடு  இலந்தகுளம் பகுதியில் உள்ளது. மேலும் மலைப்பகுதியை ஒட்டியுள்ள வயலுக்கு செல்லும் அனைவரும் இலந்தகுளம் வழியாகவே நடந்தும், மாடுகளையும் ஓட்டிச்செல்ல வேண்டும்.

மழை இல்லாத நேரத்தில் குளம் வழியாக இப்பகுதிகளுக்கு எளிதாக சென்று விடும் நிலையில் மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் தண்ணீரால் சுமார் முக்கால் கி.மீ. தொலைவுக்கு இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை மக்கள் சுமந்து கொண்டு சுடுகாட்டிற்கு செல்லும் அவலம் தொடர்கிறது. உடல்நலக்குறைவால் நேற்று இறந்த வெங்கடசலபதி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியரின் சடலத்தை  குளத்துப்பகுதி வரை வாகனத்தில் கொண்டுவந்த கிராம மக்கள், பின்னர் சிறிய கட்டிலில் வைத்து தோளில் தூக்கிக்கொண்டு சிரமத்துடன் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். தண்ணீர் செல்லும் பாதையில் முட்களும், உடைந்த கண்ணாடி பாட்டில்களும் கிடப்பதால் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

 எனவே,   இனிமேலாவது சுடுகாட்டிற்கு செல்ல உரிய பாதை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடையம்:  கடையம் அடுத்த ஏபி  நாடானூர் ஊராட்சிக்கு உட்பட்ட சடையாண்டியூர் கிராமத்தில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள், கிராமத்தில் இறந்தவர்கள்  உடலை இங்குள்ள பாப்பான் கால்வாய்கரை அருகேயுள்ள மயான கூடத்தில் தகனம்  செய்து வருகின்றனர். பல்லாண்டுகளாக அங்கிருந்த தனியார்  இடத்தின் வழியாக சுடுகாட்டுக்கு சென்று உடலை தகனம் செய்து வந்தனர். பின்னர்  தனியார் இடத்தின் உரிமையாளர் தனது இடத்தைச் சுற்றி வேலி போட்டு அடைத்தார்.

இதனால் இறந்தவர் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வழியில்லாமல் அப்பகுதி  மக்கள் திண்டாடினர். இதனையடுத்து வேறு பாதையில்லாமல்  பாப்பான்கால்வாய்  வழியாக சென்று இறந்தவர் உடலை தகனம் செய்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்த அவலம் நீடித்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை  பெய்து வரும் நிலையில் ராமநதி அணையிலிருந்து பிரிந்து வரும் தண்ணீர்  பாப்பான் கால்வாய் வழியாக துப்பாக்குடி பெரிய குளத்திற்கு செல்கிறது. இந்நிலையில்  சடையாண்டியூரில் 95 வயதான ஆவுடையாம்மாள் என்ற மூதாட்டி இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடலை தகனம் செய்ய பாப்பான்கால்வாயில் தண்ணீரில் தத்தளித்தபடி எடுத்துச் சென்றனர்.
 இதுபற்றி ஏபிநாடானூர் ஊராட்சி மன்ற  முன்னாள் தலைவரான தங்கராஜ்  கூறுகையில், ‘‘சுடுகாட்டுக்கு  பாதையில்லாமல் இந்த கால்வாய் வழியாக தான் கடந்த மூன்று ஆண்டுகளாக உடலை  எடுத்து சென்று வருகிறோம். இந்த கால்வாய் வழியாக  பயனடையும் கடைசி குளம் இந்த துப்பாக்குடி பெரிய குளமாகும்.

 இந்த குளம்  நிரம்பியவுடன் தண்ணீர் எதிர் திசையில் வந்து கால்வாய் முழுவதும் 6 அடிக்கு  மேல் தண்ணீர் வந்து விடும் . அப்போழுது உடலை எடுத்துச் செல்ல முடியாது.  மேலும் இங்குள்ள சுடலை மாடசாமி  கோயிலுக்கும் சென்று வர பாதையில்லாமல்  அவதிபட்டு வருகிறோம். கால்வாயை கடந்து செல்லும் போது விஷ ஜந்துகளால்  பாதிக்கபட்டு வருகிறோம். எங்களுக்கு இந்த கால்வாயை ஓட்டி பாதை அமைத்து  கொடுத்தால் உடலை எடுத்து செல்லவும், கோயிலுக்கு சென்று வரவும் மிகவும்  பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.  இதுபற்றி அப்பகுதி மக்கள் கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பல முறை  மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. ஒரு மனிதன் இறந்த பிறகும் உடலை எடுத்து செல்ல  அடிப்படை வசதியான பாதை இல்லை என்பது அந்த கிராம மக்களை வேதனைய செய்துள்ளது. 


Tags : Puliyankudi ,Kadaiyam Area People Carrying Body , Puliyankudi,Kadaiyam ,Dead Body,Hip Size water
× RELATED சங்கரன்கோவில், புளியங்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்