×

பயன்பாட்டிற்கு திறக்கப்படாத உணவுக்கூடம் சமூகவிரோதிகள் கூடாரமாக மாறி வரும் சமூக நலக்கூடம்: செம்பாக்கம் மக்கள் வேதனை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, கடந்த 2004ம் ஆண்டு டி.ஆர்.பாலு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி 8 லட்சத்தில், நகராட்சிக்குட்பட்ட திருமலை நகர், 4வது தெருவில் சமுக நலக்கூடம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பின்னர், சமூக நலக்கூடத்திற்கு உணவு கூடம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதையேற்று, டி.ஆர்.பாலு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 13 லட்சத்தில், சமுக நலக்கூடத்தின் மேல்தளத்தில் உணவு கூடம், கடந்த 2013ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை உணவு கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை நகராட்சி அதிகாரிகள் இங்கு குவித்து வைத்தனர். அவற்றை இதுவரை அகற்றாததால், பொதுமக்கள் உணவு கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கீழ்தளத்தில் விழா நடத்தும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சமையல் செய்து, சாமியானா பந்தல் அமைத்து உணவு பரிமாறி வருகின்றனர்.

இதனால் இடநெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, உணவு கூடத்தை பயன்பாட்டிற்கு திறக்க நகராட்சி அதிகாரிகளிடம்
பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் சமூக நலக்கூடம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள கிளை நூலகம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை நகராட்சி அதிகாரிகள் சரிவர பராமரிப்பது இல்லை. இதனால், சமூக விரோதிகள் சமுதாய நலக்கூட வளாகத்திலேயே மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சமூக நலக்கூடத்தின் மேல்தளத்தில் கடந்த 2013ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட உணவுக்கூடம் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. திமுக எம்.பி. மேம்பாட்டு நிதியில் இந்த சமூக நலக்கூடம் கட்டப்பட்டதால் இதனை முழுமையாக அதிகாரிகள் பராமரிப்பதில்லை. மேலும் இந்த சமூ நலக்கூட வளாகத்திற்கு காவலர் இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சமுதாய நலக் கூடத்தின் உணவு கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,’’ என்றனர்.

Tags : Sembakkam ,Tambaram , Tambaram, social welfare, Sembakkam people, agony
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...