×

திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: திருமணமான 4 மாதத்தில், மனைவியை ஏமாற்றி 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை ஜட்காபுரத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகள் சரண்யா (30) என்பவருக்கும், வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த ஜீவா (எ) ஜெகதீசன் (27) என்பவருக்கு கடந்த ஜூலை மாதம், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இதனிடையே, ஆடி மாதம் என்பதால் சரண்யாவை தாய் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆனால், ஆடி மாதம் முடிந்தும் அவரை கணவர் ஜெகதீசன் வீட்டிற்கு அழைத்து வரவில்லை. இதுபற்றி, கணவரிடம் சரண்யா கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழித்து வந்துள்ளார். சரண்யாவின் பெற்றோர் இதுபற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, ஜெகதீசன் வேறு ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்ய முடிவு செய்து, அவருடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, சரண்யா சம்மந்தப்பட்ட பெண் வீட்டிற்கு சென்று, நடந்ததை கூறி திருமணத்தை நிறுத்தினார். மேலும் இதுபற்றி பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்து விசாரணை நடத்தினர்.  அதில், சரண்யாவை ஏமாற்றி, 2வது திருமணம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Plaintiff , Married, 4 months, 2nd marriage, plaintiff, arrested
× RELATED சூரத் தொழிலதிபருடன் நடிகை சனாகான் ரகசிய திருமணம்