×

கோயில் வீடுகளில் குடியிருப்போர் பெயர் மாற்றம் செய்ய 10 மடங்கு வாடகை நன்கொடையாக தர வேண்டும்

* அறநிலையத்துறை கடும் நிபந்தனை
* வாடகைதாரர்கள் அதிர்ச்சி

சென்னை: பெயர் மாற்றம் செய்ய 10 மடங்கு வாடகை நன்கொடையாக தர வேண்டும் என்று அறநிலையத்துறை கடும் நிபந்தனை விதித்துள்ளது.இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளது. இந்த வீடு, கடைகளில் வாடகைக்கு வசித்து வருவோர் பல ஆண்டுகளாக பெயர் மாற்றம் செய்யாமல்  உள்ளனர். இதனால், வாடகையை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக அறநிலையத்துறை கூறி வருகிறது. ஆனால், இது குறித்து வாடகைதாரர்களிடம் கேட்டால் நாங்கள் வசிக்கும் வீட்டை தானமாக எழுதி கொடுத்தால் மட்டுமே  பெயர் மாற்றம் செய்வோம் என்று கோயில் அலுவலர் தெரிவிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து, அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவை தொடர்ந்து பெயர் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெயர் மாற்றம் செய்து கொள்ளாத நபர்கள் ஆக்கிரமிப்பாளர்கள்  எனக்கருதி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெயர் மாற்றம் செய்ய வாடகைதாரர்கள் முன்வந்தனர். ஆனால், அறநிலையத்துறை கடும் நிபந்தனை விதித்து இருப்பது வாடகைதாரர்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

அறநிலையத்துறையின் நிபந்தனையின்படி, பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் 1.7.2016 முதல் நியாய வாடகை நிர்ணயப்படி வாடகை நிலுவையின்றி ஒரே தவணையில் செலுத்திட வேண்டும்.  இலாகா மூலம் நிர்ணயம் செய்யும் நன்கொடை குடியிருப்புக்கு எனில் நியாய வாடகையில் ஒரு மாத வாடகையில் 10 மடங்கும், வணிக பயன்பாட்டிற்கு எனில் மாத வாடகையில் 15 மடங்கு நன்கொடை செலுத்திட சம்மதம் கடிதம் அளிக்கப்பட  வேண்டும். வரும் 31.12.2019க்குள் விண்ணப்பித்து பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். 31.12.2019க்குள் விண்ணப்பித்து பெயர் மாற்றம் செய்து கொள்ள முன்வராத உள்வாடகைதாரர்கள் மற்றும் வாடகைதாரர்கள் வாரிசுகள் மீது இந்து  அறநிலையத்துறை சட்டம் 78ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள இணை ஆணையர்களுக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : tenants ,temple houses , name , residents, temple houses, rent
× RELATED வீட்டு வாடகையை அரசே ஏற்க கலெக்டரிடம் மனு