×

அதிகாலை கொட்டித்தீர்த்த மழையால் குன்னூரில் 15 இடங்களில் மண்சரிவு

குன்னூர்:  நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரு நாட்களாக தூரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று அதிகாலை குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. குன்னூரில் மட்டும் 139 மி.மீ. மழை  கொட்டியது. கனமழையால் குன்னூர்-மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், குன்னூர் முதல் பர்லியார் வரை காந்திபுரம், காட்டேரி, மரப்பாலம் உட்பட 15 இடங்களில் மண்சாிவு ஏற்பட்டது. சில இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால்  அதிகாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கிராமப்புற பகுதிகளில் இருந்து குன்னூர் வரும் பஸ்கள் காட்டேரி பகுதியில் நிறுத்தப்பட்டது. அங்கு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து  குன்னூர் வந்தனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்புத்துறையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சாலை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். 20 வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டது: குன்னூர் தாலுகாவுக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆயிரத்துக்கு அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஆறு செல்கிறது. மழையால் கிருஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  காட்டாற்று வெள்ளத்தில் கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என 20 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. காலையில் மழை குறைந்தது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாகனங்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

போடிமெட்டு சாலையில் மண்சரிவு:  தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு போடிமெட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தமிழக, கேரளாவை இணைக்கும் போடிமெட்டு மலைச்சாலையில் மழைநீர்  ெபருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலை 1 மணியளவில் போடிமெட்டு மலைச்சாலையில் 11வது கொண்டை ஊசி வளைவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் போடி  முந்தல் சோதனைச்சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோல் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த வாகனங்கள் போடிமெட்டு சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டன. இதன்பின் மண்சரிவு அகற்றப்பட்டு காலை 9.30 மணிக்கு  போக்குவரத்து தொடங்கியது. மண்சரிவால் 9 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இதன்மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நீர்மட்டம் 105 அடியை எட்டியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானி ஆற்றில்  விநாடிக்கு 14900 கனஅடியும் கீழ்பவானி வாய்க்காலில் 2100 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Tags : places ,Coonoor , Early morning, Landslides ,Coonoor
× RELATED பலத்த மழையால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் சாய்ந்தன