×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்யக்கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்: 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு

சிதம்பரம்: அர்ச்சனை செய்யக்கூறிய பெண்ணை கன்னத்தில் தீட்சிதர் அறைந்தார்.  இதைடுத்து, அவர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி. இவரது மனைவி லதா (51). அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர். நேற்று முன்தினம் தனது மகனின் பிறந்தநாளையொட்டி லதா, சிதம்பரம் நடராஜர்  கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். கோயில் பிரகாரத்தில் உள்ள முக்குருணி விநாயகர் சன்னதியில் மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு கூறி தேங்காய், பழத்தட்டை கொடுத்துள்ளார். ஆனால், தீட்சிதர் தர்சன், வெறும் தேங்காயை மட்டும் உடைத்துவிட்டு மீண்டும் லதாவிடம் பழத்தட்டை கொடுத்துள்ளார். அதற்கு லதா ஏன் அர்ச்சனை செய்யவில்லை எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர் தர்சன், லதாவை  கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் லதா கீழே விழுந்துள்ளார். உடனே பக்தர்கள், தீட்சிதரிடம் வாக்குவாதம் செய்தனர்.

‘‘நீங்கள், பெண்ணை அறைந்ததை நாங்கள் பார்த்தோம். நாளுக்குநாள் உங்கள் அராஜகம் அதிகரித்து வருகிறது’’ என  தீட்சிதரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தீட்சிதர், உட்கார்ந்து கொண்டு திமிராக பதில் கூறியது வீடியோவாக அனைத்து சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லதா  சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். இதன்பேரில், தீட்சிதர் தர்சன் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3  பிரிவுகளின்கீழ்  வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.



Tags : Chidambaram Natarajar Temple , Chidambaram Natarajar, Temple,trouble,sections
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...