×

ஆரோக்கிய விளையாட்டுக்கு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்: டி.ரங்கநாதன், புளூவேல் திரைப்பட இயக்குனர்

மதுரையில் விக்னேஷ் என்ற சிறுவன் புளூவேல் விளையாட்டிற்கு பலியானது மனதில் ஆழமான வேதனையை ஏற்படுத்தியது. இதை தடுக்க என்னால் முடிந்த உதவியாகத்தான் அந்த சம்பவத்தை மையமாக வைத்து புளூவேல் என்ற படத்தை  இயக்கி இருக்கிறேன். அந்த பையன், படிப்புல ரொம்ப ஈடுபாடோடு இருந்தவன். ரொம்ப ஆக்டிவ்வான பையன். அவனையே தற்கொலை பண்ற அளவுக்கு இந்த விளையாட்டு தூண்டியிருக்கிறது என்றால், அப்படி என்ன நடந்திருக்கும் என்பதை  இதில் திரைக்கதையாக சொல்கிறேன்.
 இன்றை்ய பொருளாதார சூழலில் கணவன், மனைவி இரண்டு பேருமே வேலைக்கு போக வேண்டிய சூழல் இருக்கிறது. அப்போது படிக்கிற பசங்க தனிமையில விடப்படுகிறார்கள். அவர்களின் தனிமையை போக்குவது போன்கள்தான். அதற்கு  அடிமையாகும்போது இந்த மாதிரி விளையாட்டுகளுக்கும் அடிமையாகிறார்கள். அதையும் இந்த படம் பேசுகிறது. படத்திற்காக இது குறித்து நிறைய ஆய்வு செய்தேன். ரஷ்யாவில் உள்ள மாணவர்கள் 3 பேர் சேர்ந்துதான் இதனை  ஆரம்பித்தார்கள். அவர்கள் 132 பேரை இதற்குள் இழுத்து தற்கொலை செய்து கொள்ள வைத்தார்கள். கடைசியில் அவர்கள் கைது செய்யப்பட்டபோது “எப்போது பார்த்தாலும் தொலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பவர்கள் பூமிக்கு  பாரமானவர்கள். அதனால் அவர்களை களையெடுத்தோம்” என்று கூலாக சொன்னார்கள்.

2017ல் அமெரிக்காவில் இந்த மாதிரி கேம்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் உலகம் முழுக்க பரவியது. இந்தியா மாதிரி வளரும் நாடுகளுக்கும் வந்தது. இதை இயக்குபவர்கள் தனி நபராகவோ, அல்லது ஒரு குழுவாகவோ இருக்கலாம்.  சைக்கோத்தனம்தான் இதற்கு மூல காரணம். கொலை செய்வதில், மற்றவர்களை துன்புறுத்தி பார்ப்பதில் இவர்களுக்கு ஒரு சந்தோஷம். அதனை மற்றவர்கள் மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள்.இந்த விளையாட்டில் சிக்குகிறவர்கள் இரண்டு விதம். மிகவும் துணிச்சலானவர்கள், மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறவர்கள். துணிச்சலானவர்கள் என்ன ஆகுது என்று பார்க்கலாம் என்று இதற்குள் நுழைந்து பிறகு வெளியில் வர முடியாமல்  மாட்டிக் கொள்வார்கள். மனஅழுத்தம், கவலை கொண்டவர்களை, பேஸ்புக், டுவிட்டரில் அவர்களின் பதிவுகள் மூலம் கண்டுபிடித்து விளையாட்டை இயக்குகிறவர்கள் இதற்குள் இழுத்து விடுகிறார்கள். ‘50வது டாஸ்கில் நீ சாக வேண்டும்’  என்கிற முன் அறிவிப்போடுதான் இதனை ஆரம்பிக்கிறார்கள். மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு என்ன பலவீனமோ அதை கொண்டு மிரட்டுவார்கள். அதாவது, அம்மா மீது பாசமுள்ளவனாக இருந்தால் “இதை செய்யாவிட்டால் உன் அம்மாவை கொன்று விடுவோம்” என்பார்கள்.ஏன் இதற்குள் சிக்குகிறார்கள் என்றால் அதற்கு பெற்றவர்கள்தான் காரணம். குடும்ப உறவுகள் அறுந்து விட்ட ன. தாத்தா பாட்டிகள் அருகில் இல்லை. அம்மா அப்பாவுக்கு பிள்ளைகளுடன் செலவிட நேரம் இல்லை. அதனால் அவன் செல்போன்  துணையை நாடுகிறான். விளையாட்டுக்குள் சிக்குகிறான்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது பிள்ளைகளுக்காக செலவிட வேண்டும். அவர்களின் நிறை குறைகளை கேட்க வேண்டும். உடல் ரீதியான, உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தக்கூடிய ஆரோக்கிய  விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்.  விளையாட்டின் களைப்பால் இரவில் சீக்கிரமே அவர்கள் உறங்கத்தான் நினைப்பார்கள். படிப்பு என்பதே பணம் சம்பாதிக்கத்தான் என்கிற மனநிலையிலிருந்து பெற்றோர்கள் வெளியில் வரவேண்டும். அப்படி வராவிட்டால் சரியாக படிக்காத மகன்  ‘வேஸ்ட்’ என்று நினைப்பார்கள். அ்தை பிள்ளைகளிடம் வெளிப்படுத்துவார்கள். இதனால் பிள்ளைகள் ஆறுதலான இடத்தை தேடுவார்கள். அது இந்த மாதிரியான விளையாட்டாகவும் அமைந்து விடும்.தாத்தா பாட்டிகள் அருகில் இல்லை. அம்மா அப்பாவுக்கு பிள்ளைகளுடன் செலவிட நேரம் இல்லை. அதனால் அவன் செல்போன் துணையை  நாடுகிறான். விளையாட்டுக்குள் சிக்குகிறான்.

Tags : Children ,T. Ranganathan ,Film Director , wellness, game,encouraged, T. Ranganathan, Film Director
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...