வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகம் சின்ன வெங்காயம் 120க்கு விற்பனை: பொங்கல் வரை விலை குறையாது

சென்னை: வரத்து குறைவால் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயம் விலை 120 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வெங்காயம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகி போனது. இதனால் தமிழகத்திற்கான வெங்காய வரத்து பெரிய அளவில்  குறைந்துள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு தினமும் 80 லாரிகளில் வெங்காயம் வருவது வாடிக்கையாகும். இதில் தற்போது 40 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் கோயம்பேடு  மார்க்கெட்டில் பெரிய வெங்காயம்(பல்லாரி) கிலோ ₹20 முதல் ₹30 வரை விற்கப்பட்டது.  சின்ன வெங்காயம்(சாம்பார் வெங்காயம்) 30 முதல் 40 தான் விற்பனையாகி வந்தது. தற்போது  வெங்காயம் வரத்து குறைவால் வெங்காயம் விலை  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய  வெங்காயம் விலை தரத்திற்கு ஏற்றார் போல் 50 முதல் 65 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் ₹85க்கும்  விற்கப்படுகிறது. இது மொத்த மார்க்கெட்டில் தான். ஆனால், அதை வாங்கி விற்கும் சில்லரை வியாபாரிகள் கூடுதலாக விற்கின்றனர். அதாவது, பெரிய வெங்காயம் 80 முதல் 90 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் 100 முதல் 120  வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விலை  ஒவ்வொரு ஏரியாவுக்கு மாறுபடுகிறது.வெங்காயம் விலை உயர்வால் அனைத்து தரப்பினரும்கலக்கம் அடைய செய்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் கூடுதலாக ஒதுக்கும் நிலைக்கு அவர்கள்  தள்ளப்பட்டுள்ளனர்.

சமையலில் வெங்காயம் என்பது முக்கிய பங்கு வகித்து வருகிறது. வெங்காயம் விலை உயர்வால் சமையலில் வெங்காயத்தின் பயன்பாட்டை இல்லத்தரசிகள் வெகுவாக குறைக்க தொடங்கியுள்ளனர். பெயரளவுக்கு தான் வெங்காயத்தை  சாம்பார் உள்ளிட்ட குழம்புகள், பொறியல், அவியலில் சேர்க்கின்றனர். இட்லி, தோசையில் வெங்காயம் சட்னி, தேங்காய் சட்னி பயன்படுத்தப்பட்டு வந்தது. விலை உயர்வால் வெங்காயம் சட்னிக்கு பதிலாக தக்காளி சட்னிக்கு மக்கள்  மாறியுள்ளனர்.இதே ேபால ஓட்டல்களில் பிரியாணிக்கு வழங்கப்படும் வெங்காயம் பச்சடி பெயர் அளவுக்கு தான் வைக்கப்படுகிறது. அதுவும் ஒரு முறை தான் வைக்கப்படுகிறது. திரும்ப கேட்டால் வைப்பது இல்லை என்று ஓட்டலில் சாப்பிடுபவர்கள் குற்றம்  சாட்டியுள்ளனர். மேலும் ஆம்லெட்டில் வெங்காயத்தின் அளவை குறைத்து முட்டைகோஸ் அதிக அளவில் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.இது குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் ஒரே நேரத்தில் மழை பெய்துள்ளது. இதனால், தான் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவால் வெங்காயம் விலையும் உயர்ந்து வருகிறது.  விலை உயர்வால்  வெங்காயத்தை வாங்க மக்கள் தயங்கி வருகின்றனர். வர உள்ள   பொங்கலுக்கு புதிய வரத்து வெங்காயம் வரும். குறிப்பாக தமிழகத்தில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக வரும். அப்போது தான் வெங்காயம் விலை குறைய  வாய்ப்புள்ளது. அது வரை வெங்காயம் விலை உயர்வை தான் சந்திக்கும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Continuous rise ,arrival, 120, Pongal,down
× RELATED நாட்டு வெங்காயத்தை போல் சுவை...